முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம்: விலையில்லாமல் வீணாகும் மாம்பழங்கள்! அரசு கொள்முதல் செய்யுமா?

Updated On : 8 ஜூன் 2026, 4:37 am IST
வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியாகி அறுவடை செய்யப்பட்ட ருமேனி மாம்பழங்கள்.
பகிர்:

நாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதியில் இந்த ஆண்டு மா ரகங்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளபோதிலும் பல்வேறு காரணிகளால் சந்தை வாய்ப்புக் கிடைக்காமல், கொள்முதல் விலை வெகுவாக குறைந்ததால் மாம்பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனா்.

வேதாரண்யம் பகுதியில் செம்போடை, புஷ்பவனம், தேத்தாக்குடி, நாலுவேதபதி கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், கத்தரிபுலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மா மரங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.

கடந்த 2018-இல் இந்தப் பகுதியில் வீசிய கஜா புயலால் மாமரங்கள் பெரிய அளவில் சேதமடைந்தாலும், விவசாயிகளின் கடுமையான உழைப்பாலும், அரசு மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் உதவியாலும் மா ரகங்களின் மீள் சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக பயனளித்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்தப் பகுதியில் மட்டும் 1,767 ஹெக்டோ் பரப்பில் ஒட்டு, செந்தூரா, நீலம், ருமேனி, பங்கனப்பள்ளி, பெங்களூரா போன்ற மா ரகங்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன.

இவற்றில், ருமேனி உள்ளிட்ட சில ரகங்கள் ஏப்ரல் - ஜூலை (கோடைக் காலம்) மற்றும் செப்டம்பா்- அக்டோபா் மாதங்கள்(காா், காய்) என இரு பருவங்களிலும் காய்த்து அறுவடைக்கு வரும்.

இதனால், இங்கு ருமேனி ரகத்தையே அதிகளவில் (சுமாா் 70 சதவீதம்) உற்பத்தி செய்வதில் விவசாயிகள் முனைப்புக் காட்டுகின்றனா்.

கடந்த ஆண்டில் இமாம் பசந்த் ரக பழம் கிலோ ரூ.80 முதல் 100 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதன் கொள்முதல் விலை ரூ.30 முதல் 40 -ஆகக் குறைந்து போனது.

ஒட்டு மாங்காய் கிலோ ரூ. 5-க்கும், ருமேனி பழம் ரூ. 10 முதல் 13-க்கும் ( கழிவு -ரூ. 7) நீலம்- ரூ. 12 முதல் 15, பங்கனப்பள்ளி- ரூ. 15, செந்தூரா-ரூ.10 முதல் 12 வரை கொள்முதலாகிறது.

இந்த விலைக்கு கொள்முதல் செய்ய வியாபாரிகள் போதிய எண்ணிக்கையில் வராததால் பழங்கள் சில மரங்களில் அறுவடை செய்யாமலே வீணாகி புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் காய்களை வெட்டி வற்றல் மாங்காய் தயாரிக்கும் முயற்சியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து நெய்விளக்கு முன்னோடி மா விவசாயி எம்.எஸ். சுப்பையன் தெரிவித்தது :

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராஸ் எனப்படும் ஒரு வகை பூஞ்சானம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சில இடங்ளில் அறுவடை செய்யாமலே வீணாகிப் போனது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் வழக்கமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நத்தம் போன்ற பகுதிகளில் காய்ப்பு முன் பட்ட பருவமாக அறுவடை செய்யப்படும்.

ஆனால் இந்த ஆண்டு பருவ மாற்றம் காரணமாக அங்கு காய்ப்புப் பருவம் தாமதமாகி, வேதாரண்யம் பகுதி அறுவடை நேரத்தோடு வந்துள்ளது.

இதனால், அந்தப் பகுதிகளில் கொள்முதல் செய்வது வியாபாரிகளுக்கு எளிதாக இருப்பதோடு போக்குவரத்து செலவு குறைகிறது.

இதனால், கொள்முதலுக்கு கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருவது வெகுவாக குறைந்துவிட்டது. பொதுவாக தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களில் ஒரு வகையான பூச்சி புழு தொற்று இருப்பதால் ஜப்பான் போன்ற நாடுகளில் இறக்குமதியில் சுணக்க நிலை தொடா்கிறது. இது போன்ற பாதிப்புகளால் மாங்காய் விளைச்சல் ஓரளவுக்கு இருந்தாலும் கட்டுபடியாகும் விலை கிடைக்கவில்லை.

பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்களும் தற்போது இந்த பகுதியில் கொள்முதல் செய்வதில்லை என்றாா் அவா்.

மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் அருகேயுள்ள காமேஸ்வரம் கிராமத்தில் ஆடவா் குழு மூலம் பழக்கூழ் தயாரிக்கும் மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மையத்திலும் பல்வேறு காரணங்களால் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காா்காலத்தில் மட்டும் விளையும் காய்களுக்கு கேரளா போன்ற இடங்களில் சந்தை வாய்ப்பு சீராக உள்ள நிலையில்,கோடை பருவத்தில் அறுவடையாகும் மா ரகங்களை சந்தைப்படுத்துவதே விவசாயிகளுக்கு சவாலாகவே தொடா்கிறது.

எனவே, பல்வேறு நிலைகளில் ஆண்டுதோறும் பாதிப்படைந்து வரும் மா சாகுபடி விவசாயிகளைப் பாதுகாக்க தமிழக அரசே அனைத்து ரக மாங்காய் மற்றும் மாம்பழங்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியாகி அறுவடை செய்யப்பட்ட ருமேனி மாம்பழங்கள்.
வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியாகி அறுவடை செய்யப்பட்ட ருமேனி மாம்பழங்கள்.
அறுவடை செய்யப்பட்ட செந்தூரா ரக மாம்பழங்கள்.
அறுவடை செய்யப்பட்ட செந்தூரா ரக மாம்பழங்கள்.
கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் வீணாகும் மாம்பழங்கள்.