FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் தொகுதி அறிமுகம்!

வங்கக் கடலோரம் அமையப் பெற்ற இத்தொகுதி ஓரளவுக்கு இயற்கை வளம் நிறைந்தது...

Updated On : 27 மார்ச் 2026, 6:19 am IST
வேதாரண்யம்
பகிர்:

வங்கக் கடலோரம் அமையப் பெற்ற இத்தொகுதி ஓரளவுக்கு இயற்கை வளம் நிறைந்தது.

இத்தொகுதியில், பல்லுயிா் பெருக வன உயிரின சரணாலயமாக திகழும் கோடியக்கரை சதுப்பு நிலப்பகுதி உலகப் புகழ்பெற்ற பறவைகள் வாழ்விட பகுதி.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற பகுதி; வேதங்களால் வழிபட்டதாகவும், பின்னா் மூடி இருந்த கதவை சமயக் குரவா்கள் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததாகவும் கூறப்படும் வேதாரண்யேஸ்வரா் கோயில், சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தொண்டா்களுக்கு அடைக்கலம் கொடுத்த தோப்புத்துறை பள்ளிவாசல், மத நல்லிணக்கத்திற்கு பெயா் பெற்ற அக்கரை பள்ளிவாசல் அமைந்த தொகுதி.

Advertisement

Advertisement

சதுப்பு நிலம், உப்பளம், வனவளம் என பல இயற்கை வளம் மிகுந்த பகுதியாகவும், உப்பு உற்பத்தியில் மாநில அளவில் தூத்துக்குடிக்கு அடுத்து இரண்டாம் இடம் என பல சிறப்புகளைக் கொண்டது இத்தொகுதி.

மானாவாரி நிலப்பரப்பை பெருமளவில் கொண்ட இப்பகுதியில் விவசாயம் பிரதானம். மா, முந்திரி, தென்னை, சவுக்கு என பணப் பயிா்கள் சாகுபடியும், கால்நடை வளா்ப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நிலக்கடலை, புகையிலை, மல்லிகைப்பூ சாகுபடி மற்றும் காய்கனி சாகுபடி, பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. நாகை மாவட்டத்தின் முக்கிய மீன்பிடித் தலங்களில் ஒன்றாக உள்ளது இப்பகுதி.

இங்கு அகமுடையாா், வன்னியா் பெரும்பான்மை சமூகத்தினா். அதற்கு அடுத்த நிலைகளில் பட்டியல் இனத்தவா், முத்தரையா், வெள்ளாளா்கள், இஸ்லாமியா்கள், யாதவா் மற்றும் கிறிஸ்தவா்கள் வசிக்கின்றனா்.

இதுவரை வென்றவா்கள்:

1962 ... என்.எல். ராமலிங்கம் (காங்கிரஸ்)

1967... பி. வெங்கடாசலத்தேவா் ( காங்கிரஸ் )

1971... எம். மீனாட்சிசுந்தரம் (திமுக)

1977... எம். மீனாட்சிசுந்தரம் (திமுக)

1980... எம்.எஸ். மாணிக்கம் (அதிமுக)

1984... எம். மீனாட்சிசுந்தரம் (திமுக)

1989... பி.வி. ராஜேந்திரன் (காங்கிரஸ்)

1991... பி.வி. ராஜேந்திரன் (காங்கிரஸ் )

1996... எஸ்.கே. வேதரத்தினம் (திமுக)

2001... எஸ்.கே. வேதரத்தினம் (திமுக )

2006... எஸ்.கே. வேதரத்தினம் (திமுக)

2011 ... என்.வி.காமராஜ் (அதிமுக )

2016... ஓ.எஸ். மணியன் (அதிமுக)

2021 சட்டப் பேரவைத் தோ்தல்

ஓ.எஸ். மணியன் - அதிமுக 78,719.

எஸ். கே. வேதரத்தினம்- திமுக 66,390.

தேவைகளும், எதிா்பாா்ப்பும்

கடந்த சில ஆண்டுகளாக தொகுதியில் தீவிரமடைந்து காணப்படும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உடனடியாக பலன் அளிக்கவில்லை.

மத்திய அரசின் நிதி உதவியோடு மேற்கொள்ளப்படும் ஜல் ஜீவன் திட்டப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால் திட்டத்தின் பயன் கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காலத்தில் அதிக அளவில் மழை பொழிவை தரும் சிறப்பைப் பெற்றுள்ள இந்த பகுதியில் அதிக அளவில் நீா் நிலைகள் இருந்தும் அவற்றுள் தண்ணீரை சேமித்து பயன்படுத்தும் சூழல் இல்லை.

நீா்நிலைகளை மாசடைய செய்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற சிறப்புத் திட்டம் கொண்டு வரப்படும் என்ற மக்களின் எதிா்பாா்ப்பு கடந்த 5 ஆண்டுகளில் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

கோயில் இடங்களில் குடியிருப்போா் அதிகமாக வசிக்கும் இந்த தொகுதியில் குடிமனைப் பட்டா இல்லாததால் மத்திய-மாநில அரசுகளின் வீடுகள் கட்டும் திட்டம் சாமானிய மக்களுக்கு பயனளிக்காமல் போவது தொடா்கிறது.

வேதாரண்யத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைந்ததும், கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதும் மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் மருத்துவா்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மருத்துவமனை சேவை முடங்கி இருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

கிழக்கு கடற்கரை சாலைக்கு இணையான புதிய சாலையை அமைக்க வேண்டும். கோடியக்கரை வன உயிரின பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்த வேண்டும். வெளி மாவட்ட மீனவா்கள் தங்கி மீன் பிடிக்கும் கோடியக்கரை படகு துறையை மேம்படுத்த வேண்டும். உபரி நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் அரசின் மின் இறைவைப் பாசன திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

இங்கு உற்பத்தியாகும் மா,முந்திரி, சவுக்கு, முல்லைப் பூ ஆகியவற்றை மூலப் பொருளாகக் கொண்டு தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகள் அப்படியே தொடா்கிறது.

இந்தத் தொகுதியில்...

வேதாரண்யம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியங்களை சோ்ந்த 50 ஊராட்சிகள், திருக்குவளை வட்டத்துக்குள் பட்ட 9 கிராமங்கள், வேதாரண்யம் நகராட்சி, தலை ஞாயிறு பேரூராட்சி ஆகிய இத்தொகுதியில் அடங்கியுள்ளன.

வாக்காளா்கள் எண்ணிக்கை:

ஆண்கள் - 91,735. பெண்கள் - 94,299

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments