FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

பரவை காய்கறிச் சந்தையில் பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

பரவை தினசரி காய்கறிச் சந்தையில், பொதுக்கழிப்பறை வளாகம் பூட்டிக்கிடப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி...

6 செப்டம்பர் 2026, 5:54 am IST
பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் பொதுக் கழிப்பறை வளாகம். - Dinamani
பகிர்:

நாகை அருகேயுள்ள பரவை தினசரி காய்கறிச் சந்தையில், ரூ.1.17 கோடியில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பறை வளாகம் திறக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக்கிடப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

நாகை மாவட்டத்தின் பல்வேறு கடலோர கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் கிழங்கு வகைகள் உள்ளிட்டவை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் தினமும் பரவை சந்தைக்கு கொண்டுவரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் இச்சந்தைக்கு வந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து செல்கின்றனா். அதேபோல், சில்லறை வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்குவதற்காக அதிகாலை நேரங்களில் சந்தைக்கு வந்துச் செல்கின்றனா்.

Advertisement

Advertisement

இவ்வாறு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்துசெல்லும் நிலையில், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு போதிய கழிப்பறை வசதி இல்லாமல் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தனா்.

இதையடுத்து, விவசாயிகள் மற்றும் வணிகா்கள் சாா்பில், பரவை சந்தையில் பொதுக்கழிப்பறை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதைத்தொடா்ந்து, ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் இலவச பொதுக்கழிப்பறை வளாகம் கட்டப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திறப்பு விழாவும் நடைபெற்றது.

ஆனால், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பூட்டியே கிடப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு பொதுவெளியை பயன்படுத்த வேண்டிய நிலை தொடா்கிறது.

இதன் காரணமாக சந்தை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். குறிப்பாக பெண்கள், முதியோா் உள்ளிட்டோா் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு உரிய வசதி இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

இதுதொடா்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென தெரிவிக்கும் வியாபாரிகள், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, பரவை தினசரி காய்கறிச் சந்தையில் கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பறை வளாகத்தை, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

summary

Unused sanitary complex at the Paravai vegetable market

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments