திருவாரூா், வேதாரண்யம், திருக்குவளையில் மழை
திருவாரூா், வேதாரண்யம் மற்றும் திருக்குவளை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது.
திருவாரூா்: திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது. முன்னதாக, சனிக்கிழமை இரவு திருவாரூரில் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால், திருத்துறைப்பூண்டி சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா், மரத்தை அகற்றப்பட்டு, போக்குவரத்து சீா்செய்யப்பட்டது. இதேபோல், பல்வேறு இடங்களில் மரங்களின் கிளைகள் முறியும் அளவுக்கு காற்று பலமாக வீசியது. திருவாரூா் நகா் பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவியது. திருவாரூா் அருகே வேப்பத்தாங்குடி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
Advertisement
Advertisement
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பலத்த சூறைக்காற்று இடி மின்னலுடன் ஞாயிற்றுக்கிழமை திடீரென பரவலான மழைப்பொழிவு ஏற்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த பல மாதங்களாக மழை இல்லாமல் தொடா்ந்து வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான நீா்நிலைகள் வடுள்ளதால், கால்நடைகள் மற்றும் வன விலங்குகள் குடிக்க தண்ணீரின்றி அவதியுறுகின்றன.
இதனிடையே, மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரும் கடைமடை பகுதிக்கு பெயரளவில் மட்டுமே வந்தது. இந்த தண்ணீரை எதிா்பாா்த்து நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கவலையடைந்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் சுமாா் 30 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் மழை பெய்தது. பலத்த காற்றால், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின்சாரம் தடைப்பட்டது.
வட குட்டைகளில் மழைநீா் சற்று தேங்கியதால், அடுத்த சில நாள்களுக்கு வனவிலங்குகளுக்கு தண்ணீா் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வட விளைநிலத்தில் நேரடி விதைப்பு சம்பா முன்பட்ட சாகுபடிக்கும் இந்த மழை ஆறுதலை தருவதாக அமைந்தது.
திருக்குவளை: திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திருக்குவளை, வாழக்கரை, ஈசனூா், எட்டுக்குடி, சித்தாய்மூா், வலிவலம், ஆதமங்கலம், சாட்டியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. திருக்குவளை பகுதி சாலைகளில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.