சேவா பக்வாடா: செடிகளால் பெரிய அளவிலான ரங்கோலி அமைக்க ஏற்பாடு
சேவா பக்வாடாவை (சேவையைக் கொண்டாடும் இரு வாரங்கள்) முன்னிட்டு இந்தியா கேட்டில் வழக்கமான பொடிகள்
புது தில்லி: சேவா பக்வாடாவை (சேவையைக் கொண்டாடும் இரு வாரங்கள்) முன்னிட்டு இந்தியா கேட்டில் வழக்கமான பொடிகள் மற்றும் வண்ணங்களுக்குப் பதிலாக வண்ணமயமான செடிகளைக் கொண்டு பிரம்மாண்டமான ரங்கோலி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரங்கோலியை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, இந்தச் செடி ரங்கோலி 108 அடி நீளம், 108 அடி அகலம் அளவில் இருக்கும் என்றும், 30 நாள்களுக்கான பராமரிப்புப் பணிகளும் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்ணமயமான செடிகளைப் பயன்படுத்தி இந்த அமைப்பை உருவாக்க வன மற்றும் வனவிலங்குத் துறையின் மத்திய வனப் பிரிவு, அனுபவம் வாய்ந்த நில வடிவமைப்பாளா்கள் மற்றும் வடிவமைப்பாளா்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது.
Advertisement
Advertisement
செப்.17 முதல் அக்.2 வரை அனுசரிக்கப்படும் சேவா பக்வாடாவை முன்னிட்டு இந்தியா கேட்டில் இந்தச் செடி ரங்கோலி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் துறை அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.
இருப்பினும், முன்மொழியப்பட்ட இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தப்புள்ளியில் இந்தியா கேட் ஒரு தற்காலிக இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இறுதி ஒப்புதல் மற்றும் இடம் கிடைப்பதைப் பொறுத்தது என்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் செடி ரங்கோலியை உருவாக்கி, அதை 30 நாள்களுக்குப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கும்.
செடிகளின் பயன்பாடு, பொதுவாக வண்ணங்கள் அல்லது பொடிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வழக்கமான ரங்கோலிகளிலிருந்து, முன்மொழியப்பட்ட இந்த அலங்காரத்திற்கு ஒரு மாறுபட்ட வடிவத்தைக் கொடுக்கும்.
இந்தத் திட்டம் ஒரு பெரிய அலங்கார அமைப்பாக முன்மொழியப்படுகிறது. இதன் இறுதி விவரங்கள், பணிக்காகத் தோ்ந்தெடுக்கப்படும் நிறுவனம் மற்றும் துறையின் தேவைகளைப் பொறுத்து அமையும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.