சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா வழக்கு: இடைத்தரகருக்கு ஜாமீன்
சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தொடர்புடைய லஞ்ச வழக்கில், இடைத்தரகராகச் செயல்பட்டதாகக்
சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தொடர்புடைய லஞ்ச வழக்கில், இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் மனோஜ் பிரசாத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி தொடர்புடைய வழக்கில், ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, சிபிஐ காவல் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாக துபையைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் பிரசாத், சோமேஸ் பிரசாத் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தேவேந்தர் குமார் மற்றும் மனோஜ் பிரசாத் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், தேவேந்தர் குமாருக்கு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி ஜாமீன் அளித்து, தில்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜாமீன் மனு: இதனைத் தொடர்ந்து, தனக்கும் ஜாமீன் வழங்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனோஜ் பிரசாத் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்கப்படத் தேவையில்லை என்று அவர் கோரியிருந்தார்.
ஆனால், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. பின்னர் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தை அவர் நாடினார். தில்லி உயர்நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனோஜ் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவின் மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ""மனுதாரரை மேலும் காவலில் வைத்து விசாரிப்பதற்கான தேவை ஏற்படவில்லை'' என்று கூறி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.