FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தலைநகரில் தென்மேற்குப் பருவமழை 3 நாள்களில் தொடங்கும்!

தலைநகர் தில்லியில் பரவலாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழை ஜூன் 29-ஜூலை 1-ஆம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Updated On : 27 ஜூன் 2018, 3:02 am IST
பகிர்:

தலைநகர் தில்லியில் பரவலாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் தென்மேற்குப் பருவமழை ஜூன் 29-ஜூலை 1-ஆம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தில்லியில் கடந்த இரண்டு வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பாக கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. இதன் காரணமாக நகரில் புழுக்கம் அதிகரித்ததால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதனால், தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கினால் வெப்பத்தின் தாக்கம் குறையும் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும், பருவமழை பெய்யத் தொடங்கினால், புழுதிப் புயலின் தாக்கம் குறைந்து காற்றின் தரத்திலும் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் தில்லியில் தென்மேற்குப் பருவமழை திட்டமிட்டபடி ஜூன் 29 முதல் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான "ஸ்கைமேட்' ஆகியவை தெரிவித்துள்ளன. மேலும், பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் புதன்கிழமை (ஜூன் 26) முதல் தெரிய வரும் என்றும் தெரிவித்துள்ளன. 
ஆனால், தில்லியில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி செவ்வாய்க்கிழமையே தெரியத் தொடங்கியது. வானம் காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்வதற்கான அறிகுறி இருந்து வந்தது. இருப்பினும், இரவு வரையிலும் மழை பெய்யவில்லை. இருப்பினும், வெயில் குறைந்திருந்ததால் வெப்பத்தின் தாக்கம் கணிசமான அளவு குறைந்தது. மேலும், புழுக்கமும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
குஜராத், மேற்கு மத்திய பிரதேசம், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இதுவே தில்லியில் பருவமழை பெய்வதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம் என "ஸ்கைமேட்' தெரிவித்துள்ளது. எனவே, இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் தலைநகர் தில்லியில் பருவமழை பெய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னறிவிப்பு: செவ்வாய்க்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவகால சராசரியைவிட 3 டிகிரி உயர்ந்து 30.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 55 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே பரவலாக லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், புதன் முதல் திங்கள் வரையிலான காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 24-27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்ப்நிலை 33-36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இந்த நாள்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டை (2017) விட இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு ஜூன் - செப்டம்பர் வரையிலான காலத்தில் மழைப் பொழிவு அளவு 96-101 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 97 சதவீதம் மழைப் பொழிவு இருந்தது. இது சாதாரண அளவாகக் கருதப்படுகிறது. மேலும், 2018-இல் நாட்டில் 97 சதவீதம் மழை பெய்யும் எனவும் இது 5 சதவீதம் குறைவாகவோ, கூடுதலாகவோ இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தனது கணிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தது. ஆனால், இப்போது 4 சதவீதம் குறைவாகவோ, கூடுதலாக இருக்கக்கூடும் என கணித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்த வரையிலும், 1951 முதல் 2000-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பருவகால சராசரி மழை அளவு 89 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தலைநகர் தில்லியில் இந்த ஆண்டு பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி செப்டம்பர் வரையிலும் தொடர்ந்து மழைப் பொழிவு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வடமேற்கு இந்தியா 95 சதவீதம், மத்திய இந்தியா 106 சதவீதம், தென்னிந்தியா 92 சதவீதம், வடகிழக்கு இந்தியா 89 சதவீதம் மழைப் பொழிவைப் பெற்றன. இதேபோல, நாட்டில் 72 சதவீதம் பகுதி சாதாரண மழைப் பொழிவையும், 13 சதவீதம் பகுதி கூடுதல் மழைப் பொழிவையும், 15 சதவீதம் பகுதி பற்றாக்குறை மழைப் பொழிவையும் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments