துல்லிய தாக்குதல் விவகாரத்தில் கேஜரிவால் மன்னிப்புக் கேட்க வேண்டும்: தில்லி பாஜக
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) விவகாரத்தில்
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) விவகாரத்தில் தேசத்திடமும், ராணுவத்திடமும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தில்லி பாஜக கோரியுள்ளது.
2016, செப்டெம்பரில் காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, உரி தாக்குதல் நடந்து 10 நாள்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய இராணுவம் அங்கிருந்த பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்த துல்லிய தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்டன. துல்லிய தாக்குதல் தொடர்பாக அரசியல் லாபத்துக்காக பிரதமர் மோடி பொய் சொல்வதாக தில்லி முதல்வர் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தார். துல்லிய தாக்குதல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான ஆதாரங்கள் அடங்கிய விடியோவை மத்திய அரசு அனுமதியுடன் புதன்கிழமை இரவு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது. இத்தாக்குதல் நடைபெறவில்லை என்றும் பிரதமர் மோடி அரசியல் லாபத்துக்காக பொய்யான பரப்புரை மேற்கொள்வதாகவும் கூறிய கேஜரிவால் இந்த விவகாரத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தில்லி பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என கேஜரிவால் பல முறை கூறியுள்ளார். இதேபோல, பிரதமர் மோடி அரசியல் லாபத்துக்காகப் பொய் சொல்வதாகவும் பல முறை கேஜரிவால் கூறியுள்ளார். பிரதமர் மோடியை அவமானப்படுத்துவதாக நினைத்து இந்திய ராணுவத்தை அவர் அவமானப்படுத்தியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் தில்லி முதல்வர் கேஜரிவால் உடனடியாக தேசத்திடமும், ராணுவத்திடமும் மன்னிப்புக் கோர வேண்டும்' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.