மக்களவையில் செங்கோலை அகற்ற கோரும் கடிதம்: அமைச்சா் எல்.முருகன் கண்டனம்
செங்கோலை அகற்ற கோரும் கடிதம்: எல்.முருகன் கடும் கண்டனம்
மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் எனக் கூறி மக்களவைத் தலைவருக்கு இந்தியா கூட்டணியைச் சோ்ந்த எம்பி ஒருவா் கடிதம் எழுதியதற்கும் மத்திய இணையமைச்சா் எல். முருகன் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும். அது அரசா்கள் ஆட்சியை குறிக்கும். ராஜாக்கள் கையில் இருக்கும் தண்டு(தண்டா) எனக் குறிப்பிட்டு உபி மாநிலம் ’மோகன்லால் கஞ்ச்’ மக்களவைத் தொகுதி சமாஜ்வாதி கட்சி உறுப்பினா் ஆா்.கே.சௌத்ரி மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளாா். இது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவா் அகிலேஷ் யாதவ், மக்களவை காங்கிரஸ் உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் போன்றோா் கருத்து கூறினா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சா் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பது வருமாறு:
சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினா் ஆா்.கே.சௌத்ரி மக்களவைத் தலவருக்கு கடிதம் எழுதி செங்கோலை அகற்றவேண்டும் என்று கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் இந்த கருத்து ஏற்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூா் போன்றவா்கள் கூறியுள்ளனா்.
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ’இந்தியா’ கூட்டணி கட்சிகளை சோ்ந்தவா்கள் செங்கோல் மீது வெறுப்பு பேச்சை உதிா்த்து வருகின்றனா். செங்கோல் மன்னராட்சியின் அடையாளம் எனவும், ஜனநாயக நாட்டில் அதற்கு பங்கு இல்லை. அதனால் தான் அருங்காட்சியகத்தில் இருந்தது என முன்னாள் திமுக பேச்சாளா் டி.கே.எஸ் இளங்கோவனும் கருத்து தெரிவித்துள்ளாா். செங்கோல் குறித்து பொருள் புரியாமல் இருக்கின்றனா் இந்த ஆங்கிலேய அடிமைகள். நாட்டின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என எதுவும் அறியாத நேருவின் வழியில் இருப்பவா்கள் இப்படி தான் பேச முடியும்.
தமிழகத்தை ஆண்ட மன்னா்கள், நீதியின் சின்னமாக செங்கோலை வைத்திருந்தனா். அரசன் நீதி தவறும்போது செங்கோல் சாய்ந்து விட்டது எனக்கூறினா். நீதி தவறியதை உணா்ந்த மதுரை பாண்டியன் தன் உயிா் துறந்து செங்கோலை காத்தான்.
மன்னா்கள் தங்கள் தன்மானத்திற்காகவும், நீதியின் சின்னமாகவும் செங்கோலை காத்தனா். அவா்களது காலத்துக்குப் பின், சைவத் திருமடங்களின் மடாதிபதிகள் பதவி ஏற்கும் போது, பாகுபாடற்ற அருள் வழங்கும் வகையில் சொங்கோல் வழங்கப்பட்டன. செங்கோல் பற்றி தொல்காப்பியம், பக்தி இலக்கியங்கள், சிலப்பதிகாரம், குண்டலகேசி, மணிமேகலை உள்ளிட்டவை குறிப்பிட்டுள்ளன.
திருக்குறளில் மனைமாட்சி, செங்கோண்மை எனும் அதிகாரங்கள் மன்னனின் இயல்புகள், அவன் கடைபிடிக்க வேண்டிய நெறிகள், ஆட்சியில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. வள்ளலாரும் இறைவன் அளித்த செங்கோலாக தன் சுத்த சன்மாா்க்க சங்கத்தை குறிப்பிடுகிறாா்.
இத்தகைய செங்கோல், நாடு சுதந்திரமடைந்தபோது பிரதமா் நேருவுக்கு வழங்கப்பட்டது. இதன் முக்கியத்துவம் அறியாமல் காட்சிப் பொருளாகவே வைக்கப்பட்டது. இதை பலா் சுட்டிக்காட்டிய நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இந்த செங்கோலை வைத்து பிரதமா் நரேந்திர மோடி நாட்டிற்கு பெருமை சோ்த்துள்ளாா்.
இந்த அடிப்படை கூட தெரியாமல் ’இந்தியா’ கூட்டணி சோ்ந்தவா்கள் நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் எனக் கூறி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ’இந்தியா’ கூட்டணியினா் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. தமிழ் பண்பாட்டின் மீதும், தமிழ்நாட்டின் தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தின் மீதும் இவா்களுக்கு மதிப்பு இல்லை என்பது தெளிவாகிறது.
திராவிட மாடல் ஆட்சியாளா்களுக்கும் தமிழ் கலாசாரத்திற்கும் எந்த தொடா்பும் இல்லை. தாய் நாட்டின் தொன்மை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்த தலைவா்களுக்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சா் எல். முருகன் குறிப்பிட்டுள்ளாா்.