முகப்பு
புதுதில்லி

கும்பமேளா: தில்லி ரயில் நிலையத்தில் நெரிசல்! 3 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி!

தில்லி ரயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 15 பேர் பலியானது பற்றி...

Updated On : 16 பிப்ரவரி 2025, 1:07 am IST
தில்லி ரயில் நிலையம்.
பகிர்:

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் சனிக்கிழமை இரவு பலியாகினர்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்லும் ரயில்களில் பயணிக்க மக்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக கூடியதாலும், சில விரைவு ரயில்கள் வர தாமதமானதாலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா்.

இதனிடையே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுல் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், புதுதில்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் விரைவு ரயிலுக்காக நடைமேடை 14-இல் சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தனா்.

இதனிடையே, ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14-இல் திரண்டனா். இதனால் நடைமேடை 14 மற்றும் நடைமேடை 16-க்கு அருகில் உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதிகளவிலான பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத பொது பயணச் சீட்டுகள் விற்கப்பட்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய ரயில்வே காவலர்கள் பணியில் இல்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில், போலீஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ரயில்வே நிர்வாகம் முயற்சித்தது.

ஆனால், விபத்தில் காயமடைந்த 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் லோக்நாயக் அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கடந்த மாதம் 30-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.