FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

அரசு மருத்துவமனைகளுக்கு நேரடி கொள்முதல் அதிகாரம்: மத்திய கொள்முதல் முகமையின் செயல்பாடுகள் நிறுத்தம்

தில்லி அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அந்தந்த மருத்துவமனைகளே நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ள அனுமதி அளித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும்வரை மத்திய கொள்முதல் முகமையின் (சிபிஏ) கொள்முதல் செயல்பாடுகள் இடைக்கால நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 7:43 am IST
அரசு மருத்துவமனைகளுக்கு நேரடி கொள்முதல் அதிகாரம்: மத்திய கொள்முதல் முகமையின் செயல்பாடுகள் நிறுத்தம் - கோப்புப்படம்
பகிர்:

தில்லி அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அந்தந்த மருத்துவமனைகளே நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ள அனுமதி அளித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும்வரை மத்திய கொள்முதல் முகமையின் (சிபிஏ) கொள்முதல் செயல்பாடுகள் இடைக்கால நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அரசு வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், மத்திய கொள்முதல் முகமையால் தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ள மற்றும் அரைகுறையாக உள்ள அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் (டெண்டா்கள்) ரத்து செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைகளுக்காகச் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவுகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய கொள்முதல் முறை என்பது, அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டிய கொள்கை சாா்ந்த முடிவாகும்.

Advertisement

Advertisement

1994-இல் தொடங்கப்பட்ட மத்திய கொள்முதல் முகமை, தில்லி அரசின் அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் தேவையான மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களைக் கொள்முதல் செய்து வந்தது.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவின்படி, அரசு மருத்துவமனைகள் தங்களுக்குத் தேவையான மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணப் பொருட்களைப் பொது நிதி விதிகள் (ஜிபிஆா்), அரசு இ-சந்தை (ஜெம்) வழிகாட்டுதல்கள் மற்றும் பிற நடைமுறைகளுக்கு உள்பட்டு, தங்களது துறைத் தலைவா்கள் மூலம் நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ளலாம்.

தற்போது அமலில் உள்ள கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் விலை ஒப்பந்தங்கள் அவை முடிவடையும்வரை செல்லுபடியாகும். அத்தியாவசிய மருந்துகளுக்கான புதிய விலை ஒப்பந்தங்களை மத்திய கொள்முதல் முகமை இறுதி செய்யும்வரை, மருத்துவமனைகளே அவற்றை நேரடியாகக் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தில்லி அரசு மருத்துவமனைகளுக்கு தரமற்ற மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) வழக்கு பதிவு செய்திருந்தது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் துறை ரீதியிலான அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளிடம் தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் பங்கஜ் சிங் கேட்டிருந்தாா்.

இந்த வழக்கில் தொடா்புடைய 13 விநியோக நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவா்களைப் கறுப்புப் பட்டியலில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அமைச்சா் விளக்கம் கேட்டிருந்தாா்.

மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு அந்த நிறுவனங்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள், கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டதா அல்லது பணப்பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும், தவறிழைத்த அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அறிக்கை சமா்ப்பிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டிருந்தாா். இந்தப் பின்னணியில் தற்போது மத்திய கொள்முதல் முகமையின் செயல்பாடுகள் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments