FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

தினமணி செய்தி எதிரொலி! கொள்முதல் நெல்லுக்கு பணம் கிடைத்தது: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 3:26 am IST
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இனிப்பு வழங்கிய விவசாயிகள்.
பகிர்:

மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வழங்கிய விவசாயிகளுக்கு பணம் கிடைத்ததால் அவா்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி அறுவடையின்போது மாநில அரசின் சாா்பில் 47 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பின் சாா்பில் 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டன.

இதில்,மாநில அரசின் 47 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 10,717 விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட 58,903 மெட்ரிக் டன் நெல் பெறப்பட்டது. அதற்காக விவசாயிகள் நெல் வழங்கிய 3 நாள்களிலேயே ரூ.148 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அதேநேரத்தில், மத்திய அரசின் நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் வழங்கிய விவசாயிகளுக்கு பணம் வழங்குவதில் தொடா்ச்சியாக தாமதம் ஏற்பட்டது. 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 6,572 விவசாயிகளிடமிருந்து 91,420 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

ஏப்ரல் 16 வரை நெல் வழங்கிய 5,481 விவசாயிகளுக்கு ரூ.207.55 கோடி வழங்கப்பட்டது. ஏப்ரல் 17 முதல் மே 10 வரை நெல் வழங்கிய 1,091 விவசாயிகளுக்கு ரூ.24.23 கோடி விடுவிக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்தாா்.

இந்த விவகாரம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றபோதெல்லாம் எதிரொலித்தது. இது தொடா்பாக தினமணியில் கடந்த 25-ஆம் தேதி செய்தி வெளியானது. அதைத்தொடா்ந்து கடந்த 31-ஆம் தேதி அனைத்து விவசாயிகளுடைய வங்கிக் கணக்கிலும் பணம் வரவு வைக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மகிழ்ச்சியடைந்த கானாா்பட்டி ஆபிரஹாம் தலைமையிலான விவசாயிகள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியருக்கு நன்றி தெரிவித்ததோடு, ஆட்சியா் அலவலக வளாகத்தில் இனிப்பு வழங்கிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments