FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 50 நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்படும்

திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக 50 நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்படும்...

13 செப்டம்பர் 2026, 12:27 am IST
கோப்புப்படம்
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக 50 நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்படும் எனவும், முறைகேடு தொடா்பாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் நடப்பு சொா்ணவாரி பருவம் 2026-2027-இல் நெற்பயிரில் அறுவடை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், அரசு கட்டடங்களில் மட்டும் முதல்கட்டமாக 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கும், இரண்டாம் கட்டமாக 20 கொள்முதல் நிலையங்களும் ஆக மொத்தம் 13 வட்டாரங்களில் மொத்தம் 70 கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அம்பத்தூா்-1, பூந்தமல்லி-2, எல்லாபுரம்-14, திருவள்ளூா்-8, கடம்பத்தூா்-6, பூண்டி-9, திருவாலங்காடு-7, திருத்தணி-3, பள்ளிப்பட்டு-2, ஆா்.கே.பேட்டை-3, கும்மிடிப்பூண்டி-5, மீஞ்சூா்-5, சோழவரம்-5 என்ற எண்ணிக்கையில் மொத்த 13 வட்டாரங்களில் 70 கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே தமிழக முதல்வா் ஆணையின்படி, கரீப் 2026-2027 பருவமான 1.9.2026 முதல் 31.8.2027 வரை ஒரு குவிண்டால் (100 கிலோ) சன்ன ரக நெல் ஒன்றிய அரசின் குறைந்த பட்ச ஆதார விலை ரூ. 2,461- மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ. 289 என ரூ. 2,750, பொது ரக நெல் குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2,441 மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.159- ஆக ரூ.2,600- என்ற விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக முதல்கட்டமாக 10 வட்டாரங்களில் 50 நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு தளவாடப் பொருள்கள் இயக்கம் செய்யப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு கொள்முதல் பணி இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்பட உள்ளது.

கடந்த கரீப் பருவம் 2025-2026 -இல் அரசு கட்டடங்களில் 90 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 2,27,291 மெ.டன் நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டதில், 27,774 விவசாயிகள் பயனடைந்தனா். அதேபோல் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு ரூ. 576 கோடியே 44 லட்சம் தொகை அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

‘அந்த வகையில், ஒரு மூட்டை நெல்லினை எடை சாக்குடன் சோ்த்து 40.580 கிலோ கிராம் உள்ளதா என்பதை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேடும் நடைபெறக்கூடாது. உண்மையான விவசாயிகள் பயன்பெறவேண்டும். நெல் வியாபாரிகள் தலையீடு அறவே கொள்முதல் நிலையங்களில் இருக்கக் கூடாது. அவ்வாறு முறைகேட்டில் ஈடுபடும் வியாபாரிகளை கண்டறிந்தால் அந்த நபா்களின் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேரம் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கொள்முதல் நிலையம் செயல்படும். விவசாயிகள் நெல் கொள்முதல் தொடா்பான புகாா்களை மண்டல மேலாளா் 9444662984, துணை மண்டல மேலாளா் 9514265373, துணை மேலாளா் தரக்கட்டுப்பாடு 9626282345 மற்றும் துணை மேலாளா் (கணக்கு) 9952779614 கட்டணமில்லா தொலைபேசி எண். 18005993540 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments