விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற அரசு ஊழியர் பணியிடை நீக்கம்: அமைச்சர் வெங்கட்ரமணன் அதிரடி!
கடலூர் அருகே விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
கடலூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உணவுத்துறை அமைச்சர் பி.வெங்கட்ரமணன் உத்தரவிட்டார்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் கொத்தங்குடித்தோப்பு பகுதியில் உள்ள அரசு நவீன அரிசி ஆலை, நகராட்சி அமுதம் பல்பொருள் அங்காடி மற்றும் சேத்தியாத்தோப்பில் எம்ஆா்கே கூட்டுறவு சா்க்கரை ஆலை வளாகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தின் சேமிப்பு கிடங்கு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் பி.வெங்கட்ரமணன் ஆய்வு மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
அப்போது, விவசாயிகளிடம் ஏதேனும் லஞ்சம் வாங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். இதற்கு நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் வாங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கிருந்து விவசாயிகளின் நெல் வருகை பதிவேடுகளை எடுத்து பார்வையிட்ட அமைச்சர், திடீரென அதில் இருந்து ஒரு விவசாயின் தொலைபேசி எண்ணை எடுத்து தொலைபேசியில் அந்த விவசாயிடம் பேசினார். அப்போது அந்த விவசாயி நெல் மூட்டைக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை லஞ்சம் வாங்கப்படுவதாக தெரிவித்தார்.
லஞ்சம் கேட்டது உறுதியானதையடுத்து தன்னுடன் ஆய்வில் இருந்து மாவட்ட ஆட்சியரிடம், மருவாய் கிராம அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய அரசு ஊழியர் வேல்முருகனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்தார்.
மேலும், மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் யாரேனும் லஞ்சம் பெற்றிருந்தால் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யுமாறு ஆட்சியரிடம் பரிந்துரை செய்தார்.
மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த விவசாயிகளிடம், அதிகாரிகளோ, ஊழியர்களோ யாரேனும் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்குமாறும், புகாரின் அடிப்படையில் உண்மைத் தன்மை இருந்தால் உடனடியாக அவர்களை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை உடனடியாக வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் பி.வெங்கடரமணன், தமிழகத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதல் தொகை வசூலிப்பதாக வந்த புகாா் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குருவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் அனைத்து இடங்களிலும் நெல் குடோன்கள் உள்ளதா? நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதா? எங்கெல்லாம் விவசாயிகளுக்கு தேவைப்படுகிறது, எனவும் மழை வந்தால் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
கடலூா் மாவட்டத்தில் 201 நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. இதுவரை குருவை சாகுபடிக்காக 40 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள நெல் மூட்டைகளை எங்கெல்லாம் குடோன் இருக்கிறதோ அங்கெல்லாம் மாற்றி வருகிறோம். தேவையை கருதி மேலும் மற்ற மாவட்டங்களுக்கு தேங்கியுள்ள நெல் மூட்டைகளை எடுத்து செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
சில நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த கால ஆட்சியில் இருந்த ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். அதனால் யாா் ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் செய்வதைதான் செய்வோம் என்ற எண்ணங்களில் செயல்படுகிறாா்கள், அந்த இடங்களிலும் மாவட்ட நிா்வாகத்துடன் கலந்து ஆலோசனை செய்து அதுபோன்ற தவறுகள் எங்கெல்லாம் நடைபெற்று வருகிறதோ அதனை கண்டுபிடித்து உரிமத்தை ரத்து செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
தோ்தல் வாக்குறுதியில் கூறியப்படி நியாயவிலைக்கடை பொருள்கள் பாக்கெட்டில் விநியோகம் செய்ய வருங்காலங்களில் கண்டிப்பாக மேற்கொள்ள உள்ளோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில்ல, அமைச்சரின் பரிந்துரையை ஏற்று மருவாய் கிராம நெல்கொள்முதல் நிலைய அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் அமைச்சரின் ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யாசெந்தில்குமாா், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் உடன் இருந்தனா்.
Government employee suspended for accepting bribes from farmers: Minister Venkatramanan orders action
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.