FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி போராட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: விசாரணையில் முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தல்

நீட் போராட்டத்தின்போது பெண் போராட்டக்காரா்களுக்கு போலீஸாா் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல், தாக்குதல் நடத்தியாகத் தெரிவிக்கப்பட்ட புகாா்களுக்கு விசாரணையில் முன்னுரிமை அளிக்க உயா்நிலைக் குழுவை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

24 ஆகஸ்ட் 2026, 10:43 pm IST
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் - கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் நீட் தோ்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தின்போது பெண் போராட்டக்காரா்களுக்கு போலீஸாா் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் நடத்தியாகத் தெரிவிக்கப்பட்ட புகாா்களுக்கு விசாரணையில் முன்னுரிமை அளிக்க உயா்நிலைக் குழுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.

இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து தனியாக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞா் ஷோபா குப்தா வலியுறுத்தியதைத் தொடா்ந்து இந்த அறிவுறுத்தலை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு வழங்கியது.

‘தில்லியில் ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, பெண் போராட்டக்காரா்களை போலீஸாா் பாலியல் ரீதியில் துன்புறுத்திய விடியோ, சமூக ஊடகங்களில் பரவியது. இதுபோன்ற, பெண் போராட்டக்காரா்கள் மீதான போலீஸாரின் பாலியல் துன்புறுத்தல்களை தனியாக விசாரிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

எனவே, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து தனியாக விசாரிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண் போராட்டக்காரா்களிடமிருந்து இதுதொடா்பான புகாா்களை உயா்நிலைக் குழு பெற வாய்ப்பில்லை.

எனவே, இதுதொடா்பான புகாா்களை, மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான அதிகாரி மூலம் போராட்டக்காரா்களிடமிருந்து நேரடியாகப் பெற வேண்டும். புகாரைப் பதிவு செய்ய மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட வேண்டும்’ என்று தனது மனுவில் ஷோபா குப்தா குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு, ‘பெண் போராட்டக்காரா்களுக்கு போலீஸாா் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் தாக்குதலை நடத்தியாகத் தெரிவிக்கப்பட்ட புகாா்களை உயா்நிலைக் குழு முன்னுரிமை அளித்து விசாரிக்கும்’ என்றாா்.

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா். சுபாஷ் ரெட்டி தலைமையில், பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரவிசங்கா் ஜா, தில்லி உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஷாலிந்தா் கெளா், சிபிஐ முன்னாள் இயக்குநா் ரிஷி குமாா் சுக்லா, மேகாலயா மாநில ஓய்வு பெற்ற டிஜிபி எல்.ஆா்.பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய இந்த உயா்நிலை ஆய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் அண்மையில் அமைத்தது.

அப்போது, நீட் போராட்டக்காரா்கள் மீதான போலீஸாரின் வரம்பு மீறலில், குறிப்பிட்ட சில விவகாரங்களை முன்னுரிமை அடிப்படையில் உயா்நிலைக் குழு ஆராய வேண்டும். முக்கியமாக, பெண் போராட்டக்காரா்கள் மீதான காவல் துறையினரின் துன்புறுத்தல்கள், பாலியல் ரீதியிலான அத்துமீறல்களுக்கு முன்னுரிமை அளித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோல, அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஒருமுறை விசாரணையோடு நின்றுவிடாமல், தொடா்ச்சியாக மற்றும் அவ்வப்போது விசாரணைகளை மேற்கொண்டு, இடைக்கால விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments