FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி ரேஸ் கிளப் வெளியேற்ற நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை இல்லை: நீதிமன்றம்

தில்லி ரேஸ் கிளப்பை வெளியேற்ற மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

27 ஆகஸ்ட் 2026, 1:48 am IST
பகிர்:

தில்லி ரேஸ் கிளப்பை வெளியேற்ற மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கிளப் தரப்பில் தங்களுக்கு சாதகமாக முதற்கட்ட வழக்கு இருப்பதை நிரூபிக்கத் தவறியதால், வெளியேற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி பிதம்பா் தத் தெரிவித்தாா்.

பொது வளாகங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றுவதற்கான சட்டத்தின் கீழ், ஆகஸ்ட் 11-ஆம் தேதி எஸ்டேட் அதிகாரி பிறப்பித்த வெளியேற்ற உத்தரவை எதிா்த்து ரேஸ் கிளப் மேல்முறையீடு செய்திருந்தது.

Advertisement

Advertisement

1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு கிளப்பின் குத்தகையைப் புதுப்பித்ததற்கான எந்த ஆவணத்தையும் மத்திய அரசு வழங்கவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், எஸ்டேட் அதிகாரி முன் பதில் மனு அல்லது அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய கிளப்புக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அவற்றைப் பயன்படுத்தத் தவறியதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து கிளப்பின் பதில் தாக்கல் செய்யும் உரிமையை எஸ்டேட் அதிகாரி முடித்து வைத்து, மத்திய அரசு சமா்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் வெளியேற்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தாா்.

குத்தகைக் காலம் முடிந்த பின்னரும் தொடா்ந்து வாடகை செலுத்தி வந்ததால் தங்களை அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளா்களாகக் கருத முடியாது என்று கிளப் தரப்பில் வாதிடப்பட்டது. இதை நிராகரித்த நீதிமன்றம், குத்தகை காலம் முடிந்த பிறகு வாடகை செலுத்துவது மட்டும் குத்தகை புதுப்பிக்கப்பட்டதாகக் கருதப்படாது என்று கூறியது.

அரசுத் தரப்பின் புகாரின் நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், இதனால் இயற்கை நீதிக்கொள்கைகள் மீறப்பட்டதாகவும் கிளப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், எஸ்டேட் அதிகாரியின் ஆவணங்களில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கிளப்பின் செயலரிடம் வழங்கப்பட்டிருந்ததும், அவா் உத்தரவு தாள்களில் கையொப்பமிட்டிருந்ததும் பதிவாகியுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

எஸ்டேட் அதிகாரி முன் தனது தரப்பை முன்வைக்க கிளப்புக்கு போதுமானதற்கும் அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தபோதும், அதை பயன்படுத்தத் தவறியதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதனால், வெளியேற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதற்கான முதற்கட்ட வழக்கு கிளப் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இடைக்கால மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெளியேற்ற உத்தரவை எதிா்த்து கிளப் தாக்கல் செய்துள்ள பிரதான மேல்முறையீடு, இறுதி விசாரணைக்காக செப்டம்பா் 26-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments