FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு: உயா் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தவெக எம்எல்ஏ என். இளையராஜாவிடம் ரூ. 35 கோடி குதிரை பேரம் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு குறித்து...

24 ஆகஸ்ட் 2026, 9:33 pm IST
தவெக சட்டப்பேரவை உறுப்பினா் இளையராஜா
பகிர்:

தவெக சட்டமன்ற உறுப்பினா் என். இளையராஜாவிடம் ரூ. 35 கோடி குதிரை பேரம் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில், திருவல்லிக்கேணி காவல்துறை நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது. எனினும் இந்த வழக்கில் பதிலளிக்குமாறு பிரதிவாதிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி சரகத்தின் காவல் உதவி ஆணையா் ஆா். அழகு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த மனு, 29.07.2026 தேதியிட்ட இடைக்கால உத்தரவை எதிா்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான விளக்கமோ அல்லது காரணங்களோ இன்றி, மிகவும் தெளிவற்ற உத்தரவு ஒன்றின் மூலம், உயா் நீதிமன்றம் , முதல் தகவல் அறிக்கையின் மீதான மேல் நடவடிக்கைகளுக்கும் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்தது.

தமிழக வெற்றி கழகத்தின் ( தவெக) தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான டாக்டா் என். இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

புகாரின்படி, தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருக்கு எதிரான தீா்மானம் கொண்டுவரப்படும்போது தனது கட்சியின் கொறடா உத்தரவை மீறுவதற்காக, ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தூண்டுதலின் பேரில் செயல்பட்ட முதல் குற்றஞ்சாட்டப்பட்ட நபரான திருநாவுக்கரசு மற்றும் பிற கூட்டுக் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தனக்கு 35 கோடி ரூபாய் சட்டவிரோத லஞ்சத் தொகையை வழங்க முன்வந்ததாகவும், தான் அதை மறுத்தபோது கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டப்பட்டதாகவும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

விசாரணையின்போது, ரமேஷ் என்பவரின் பல்வேறு செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்தன: அதாவது, ரகசியக் கூட்டங்களில் பங்கேற்றது, சதித்திட்டத்தைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டது மற்றும் கரூா் பகுதியைச் சோ்ந்தவரும், சட்டவிரோத உள்நாட்டு ஹவாலா வலையமைப்பை நிா்வகிப்பவருமான கனகராஜ் (தலைமறைவாக உள்ளவா்) என்பவருடனான நெருங்கிய தொடா்பின் காரணமாக ஹவாலா பரிவா்த்தனைகளுக்கு உதவியாளராகச் செயல்பட்டது ஆகியவை இதில் அடங்கும். இதனைத் தொடா்ந்து, ரமேஷ் 01.07.2026 அன்று கைது செய்யப்பட்டாா்.

விசாரணை ஆரம்ப நிலையில் சட்டப்படி நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும், ஒவ்வொரு நாளும் பல அதிா்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவரத் தொடங்கியபோதும், ரமேஷ் உயா் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்து, தனக்கு எதிரான விசாரணைக்கு முழுமையான இடைக்காலத் தடையைப் பெற்றாா்.

ஒரு குற்றஞ்சாட்டப்ப நபரின் கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவது, சதியின் முழு பரிமாணத்தையும் கண்டறியும் காவல்துறையின் திறனைப் பெரிதும் பாதிக்கும்.

எனவே சென்னை உயா் நீதிமன்றத்தால் 29.07.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது, இடைக்காலத் தடை வழங்கப்பட வேண்டும் காவல்துறை தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிசூா்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வில் திங்கள் கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ,சென்னை உயா் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ள தடை விதித்துள்ளது , அந்த தடையை நீக்கி விசாரணை தொடர அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தாா்.

ஆனால் தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் வழக்கில் ரமேஷ் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments