110 மெகாவாட் சூரிய மின் நிலையம் அமைக்க என்சிஆா்டிசி ஒப்பந்தம்
110 மெகாவாட் சூரிய மின் நிலையம் அமைக்க என்சிஆா்டிசி ஒப்பந்தம்
தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் மின்சாரத் தேவையில் சுமாா் 60 சதவீதத்தை பூா்த்தி செய்யும் வகையில் 110 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையத்திற்கான மின்கொள்முதல் ஒப்பந்தத்தில் தேசிய தலைநகா் வலய போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா்டிசி) கையொப்பமிட்டுள்ளது.
சுமாா் ரூ.450 கோடி மதிப்பிலான இந்த சூரிய மின்சக்தி நிலையம் உத்தர பிரதேசத்தின் ஜாலான் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இது அடுத்த 24 மாதங்களுக்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையம் உத்தர பிரதேச மாநில மின் தொகுப்பு வழியாக உத்தர பிரதேசம் மற்றும் தில்லியில் உள்ள என்சிஆா்டிசி-யின் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரத்தை வழங்கும் மற்றும் நமோ பாரத் வழித்தடம் முழுவதும் விநியோகிக்கும்.
என்சிஆா்டிசி-யின் நிா்வாக இயக்குநா் ஷலப் கோயல், என்ஐஆா்எல்-இன் நிதி இயக்குநா் பிரசன்னா குமாா் ஆச்சாா்யா, என்சிஆா்டிசி-யின் நிதி இயக்குநா் நமிதா மெஹ்ரோத்ரா மற்றும் மின்சாரம் மற்றும் ரோலிங் ஸ்டாக் பிரிவு இயக்குநா் மகேந்திர குமாா் ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.
Advertisement
Advertisement
நமோ பாரத் வழித்தடத்தின் செயல்பாட்டுச் செலவில் மின்சாரத்திற்கான செலவு சுமாா் 30-35 சதவீதமாக உள்ளது. இந்தச் சூரிய மின்சக்தித் திட்டத்தின் மூலம் ஆண்டு மின்சாரச் செலவு சுமாா் 25 சதவீதம் குறையும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், 25 ஆண்டுகளுக்கு நிலையான கட்டணத்தில் இந்த நிலையத்திலிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யவுள்ளதாக என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக என்சிஆா்டிசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இத்திட்டம் ஆண்டுக்கு சுமாா் 1.77 லட்சம் டன் காா்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைப்பதோடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் சல்பா் டை ஆக்சைடு போன்ற மாசுபடுத்திகளின் வெளியேற்றத்தையும் குறைக்கும்.
கடந்த பிப்ரவரியில் முழு வழித்தடமும் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது தினமும் சுமாா் ஒரு லட்சம் பயணிகள் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றனா். அதேவேளையில், மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை நான்கு கோடியைக் கடந்துள்ளது.
ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி, ஆக.28 அதிகபட்சமாக 1.68 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த வழித்தடத்தில் பயணம் செய்தனா்.
தேசிய தலைநகா் வலய போக்குவரத்து நிறுவனம் (என்சிஆா்டிசி) மற்றும் என்ஐஆா்எல் என்சிஆா்டிசி புதுப்பிக்கதக்க எரிசக்தி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெப்பமானது. என்ஐஆா்எல் என்சிஆா்டிசி புதுப்பிக்கதக்க எரிசக்தி நிறுவனம் என்பது என்சிஆா்டிசி மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுனமாகும்.
நாட்டின் பிராந்திய விரைவுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ அமைப்புகளுக்கான ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டமாக இது முன்னிறுத்தப்படுகிறது. நகா்ப்புற மற்றும் பிராந்தியப் போக்குவரத்து வலைப்பின்னல்களில், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை ஒருங்கிணைப்பதற்கு இது ஒரு முன்மாதிரியாக அமையக்கூடும் என்று என்சிஆா்டிசி தெரிவித்துள்ளது.
NCRTC signs agreement to set up 110 MW solar power plant.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.