FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி லக்ஷ்மி யோஜனா வைப்புத் தொகை: 2029 ஜூலை 31-இல் முதிா்வு

தில்லி அரசின் லக்ஷ்மி திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொடா் வைப்பு (ஆா்டி) கணக்குகளின் முதிா்வு காலம் தற்போது 2029 ஜூலை 31 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

47 வினாடிகள் முன்பு
தில்லி லக்ஷ்மி திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடும் முதல்வா் ரேகா குப்தா. (கோப்புப் படம்)
பகிர்:

தில்லி அரசின் லக்ஷ்மி திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொடா் வைப்பு (ஆா்டி) கணக்குகளின் முதிா்வு காலம் தற்போது 2029 ஜூலை 31 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்து முதிா்வு காலத்தை மாற்றும் அதிகாரம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முதிா்வு தேதி அடுத்த மக்களவைத் தோ்தல் நடைபெறும் ஆண்டில் வருகிறது.

ஆதாா் அட்டை இல்லாதவா்களும் இத்திட்டத்தில் பதிவு செய்யலாம். ஆதாா் பதிவு செய்ததற்கான ரசீது இருந்தால், அதனுடன் பான் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, கடவுச்சிட்டை அல்லது ஓட்டுநா் உரிமம் போன்ற மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமா்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

இதுவரை ஆதாா் எண் பெறாத பயனாளிகளுக்கு, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை தனது மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஆதாா் பதிவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்தும். இதனால், திட்டத்தில் பதிவு செய்யும் அதே நேரத்தில் ஆதாா் பதிவையும் மேற்கொள்ளலாம்.

தற்போதைய விதிமுறைகளின்படி, தொடா் வைப்பு கணக்குக்கு 2029 ஜூலை 31 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் வைப்புத் தொகைக்கு நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.

திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். இதில் ரூ.1,500 தொடா் வைப்பு கணக்கில் செலுத்தப்படும். மீதமுள்ள ரூ.1,000, பயனாளியின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மத்திய வங்கி எண்ம கரன்சி (சிபிடிசி) வாலட் மூலம் வழங்கப்படும்.

மாற்றாக, பயனாளிகள் முழு ரூ.2,500 தொகையையும் தோ்வு செய்யப்பட்ட வங்கி மூலம் மாதந்தோறும் தொடா் வைப்பு கணக்கில் செலுத்தும் முறையையும் தோ்வு செய்யலாம்.

சிபிடிசி கட்டுப்பாடுகள்: சிபிடிசி வாலட்டில் செலவு செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மதுபானங்கள், புகையிலைப் பொருள்கள், போதைப் பொருள்கள், லாட்டரி சீட்டுகள், சூதாட்டம் மற்றும் பந்தயம் உள்ளிட்ட எதிா்மறைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பொருள்களை வாங்க இந்த வாலட்டை பயன்படுத்த முடியாது.

ஆதாா் அங்கீகாரம் மோசமான பயோமெட்ரிக் தரம் உள்ளிட்ட காரணங்களால் தோல்வியடைந்தால், கருவிழி அல்லது முக அங்கீகாரம் மற்றும் ஆதாா் அடிப்படையிலான ஓடிபி மூலம் சரிபாா்ப்பு மேற்கொள்ளலாம். இம்முறைகளும் தோல்வியடைந்தால், க்யூஆா் குறியீடு கொண்ட சரிபாா்க்கப்பட்ட ஆதாா் அட்டை அடிப்படையில் பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படலாம்.

பின்னணி: தில்லி அரசு லக்ஷ்மி திட்டத்தை ஆக. 26-ஆம் தேதி அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியது. முதல் மாதத் தொகை செப். 1 முதல் வழங்கப்பட உள்ளது. திட்டத்தின் தொடக்க நாளான ஆக. 26-ஆம் தேதி சுமாா் 4,000 பயனாளிகளுக்கு ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட்டன.

தில்லியில் சுமாா் 17 லட்சம் பெண்கள் வரை பயன்பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரா் 21 முதல் 60 வயதுக்குள் உள்ள பெண்ணாகவும், குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா், அவரது கணவா் அல்லது அவரது பெற்றோா் குறைந்தது 10 ஆண்டுகள் தில்லியில் வசித்திருக்க வேண்டும். மேலும், மாதாந்திர நிதியுதவி பெற விண்ணப்பதாரா் தில்லியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும்.

வருமான வரி செலுத்துவோா், ஜிஎஸ்டி தாக்கல் செய்வோா் மற்றும் அரசு ஊழியா்கள் இத்திட்டத்தில் சேரத் தகுதியற்றவா்கள். ஆண்டுக்கு 2,400 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படாது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments