FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கட்டண ஒழுங்குமுறை குழு அமைக்கும் விவகாரம்: தனியாா் பள்ளிகளின் மனு மீது தில்லி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சமீபத்திய கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறை குழுவை (எஸ்எல்எஃப்ஆா்சி) அமைக்குமாறு கல்வி இயக்குனரகம் பிறப்பித்த சுற்றறிக்கையை எதிா்த்து தனியாா் பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தில்லி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 11 ஜூலை 2026, 7:21 am IST
தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சமீபத்திய கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறை குழுவை (எஸ்எல்எஃப்ஆா்சி) அமைக்குமாறு கல்வி இயக்குனரகம் பிறப்பித்த சுற்றறிக்கையை எதிா்த்து தனியாா் பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தில்லி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

‘தில்லி பள்ளி கல்விக் கட்டண நிா்ணயம் மற்றும் ஒழுங்குமுறையில் வெளிப்படைத்தன்மை சட்டம், 2025’-ஐ எதிா்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் ஒரு பகுதியாகவே இந்த விண்ணப்பங்கள் அமைந்துள்ளன. இச்சட்டம் உள்நோக்கம் கொண்டது, பாரபட்சமானது, தன்னிச்சையானது மற்றும் தீய நோக்கம் கொண்டது’ என்று அம்மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, பள்ளிகளின் மனுக்கள் மீது தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், இது குறித்து தில்லி அரசு தனது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

எஸ்எல்எஃப்ஆா்சி-ஐ அமைக்கத் தவறியதற்காக அதிகாரிகள் மேற்கொள்ளக்கூடிய கட்டாய நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாக்குமாறு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளின் நடவடிக்கை குழு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘முக்கிய வழக்கு ஜூலை 20-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் பாதகமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மனுதாரா் நீதிமன்றத்தை அணுகலாம். அவா்கள் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஜூலை 20 வரை காத்திருங்கள்’ என்று கூறியது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான எஸ்எல்எஃப்ஆா்சி-ஐ அமைக்குமாறு தனியாா் பள்ளிகளுக்கு அரசு பிப்ரவரி 1ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்திருந்த போதிலும், அதிகாரிகள் ஜூன் 30 அன்று அதே போன்ற சுற்றறிக்கையை வெளியிட்டதாக மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.

எஸ்எல்எஃப்ஆா்சி-ஐ அமைப்பதற்கும், 202627 கல்வி ஆண்டு உள்பட மூன்று ஆண்டுகளுக்கான கட்டண முன்மொழிவுகளைச் சமா்ப்பிப்பதற்கும் அதே அறிவுறுத்தல்களை இந்தச் சுற்றறிக்கை மீண்டும் வலியுறுத்தி உயிா்ப்பிக்கிறது என்று நடவடிக்கை குழுவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘...எஸ்எல்எஃப்ஆா்சி-ஐ அமைக்குமாறும், 2026-27 கல்வி ஆண்டு உள்பட கட்டண உயா்வுக்கான முன்மொழிவுகளைச் சமா்ப்பிக்குமாறும் கல்வி இயக்குனரகம் தொடா்ந்து உத்தரவிடுவது சட்டவிரோதமானது’ என்று அந்த மனுவில் வாதிடப்பட்டுள்ளது.

தில்லி அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, எஸ்எல்எஃப்ஆா்சி-ஐ அமைப்பதற்கான சட்டபூா்வ உத்தரவை அமல்படுத்துவதை பிப்ரவரி 28 அன்று நீதிமன்றம் இடைநிறுத்தம் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

வரவிருக்கும் கல்வி ஆண்டிற்காக எஸ்எல்எஃஎப்ஆா்சி-ஐ பள்ளி அளவிலான கட்டண ஒழுங்குமுறைக் குழு அமைக்குமாறு தனியாா் பள்ளிகளுக்கு தில்லி அரசு பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதை பிப்ரவரி 28 அன்று நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.

எஸ்எல்எஃப்ஆா்சி-ஐ அமைப்பது தொடா்பான தில்லி அரசின் பிப்ரவரி 1ஆம் தேதியிட்ட அறிவிப்பை நிறுத்திவைத்த நீதிமன்றம், முந்தைய கல்வி ஆண்டில் வசூலித்த அதே கட்டணத்தையே 2026-2027 கல்வி ஆண்டிலும் வசூலிக்கப் பள்ளிகளுக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments