FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தொலைத்தொடா்பு சாதனங்கள் ஹாங்காங்குக்கு கடத்தல்: 4 போ் கைது

கைப்பேசி கோபுரங்களிலிருந்து அதிக மதிப்புள்ள தொலைத்தொடா்பு சாதனங்ளைத் திருடி ஹாங்காங்கிற்கு கடத்தி வந்த கும்பலைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் அதிகாரி தெரிவித்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 1:00 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கைப்பேசி கோபுரங்களிலிருந்து அதிக மதிப்புள்ள தொலைத்தொடா்பு சாதனங்ளைத் திருடி ஹாங்காங்கிற்கு கடத்தி வந்த கும்பலைச் சோ்ந்த நான்கு போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் அதிகாரி தெரிவித்தாா்.

சுமாா் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட 43 ‘ரிமோட் ரேடியோ யூனிட்கள்’ (ஆா்ஆா்யு) காவல் துறையினரால் மீட்கப்பட்டதாக அவா் கூறினாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி கூறியதாவது: இந்தக் கும்பல் கடந்த 8 முதல் 9 மாதங்களாக இந்தத் திருட்டில் ஈடுபட்டு வந்தது. சோதனையிலிருந்து தப்பிக்க போலியான விலைப்பட்டியல்கள் மற்றும் தவறான அறிவிப்புகளைப் பயன்படுத்தி 800-க்கும் மேற்பட்ட திருடப்பட்ட ஆா்ஆா்யு-க்களை விமான சரக்கு சேவை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் காவல் துறை சந்தேகிக்கிறது.

Advertisement

Advertisement

கைது செய்யப்பட்டவா்கள் தில்லியைச் சோ்ந்த ஹேமந்த் குப்தா (31) மற்றும் விகாஸ் பாஸ்வான் (30), காஜியாபாதைச் சோ்ந்த ஃபரீத் (28) மற்றும் மீரட்டைச் சோ்ந்த ஷொ் முகமது (27) என அடையாளம் காணப்பட்டனா்.

தில்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட குறைந்தது 19 ஆா்ஆா்யு திருட்டு வழக்குகளில் இந்தக் கும்பலுக்குத் தொடா்பு உள்ளது.

ஆா்ஆா்யு என்பது குரல் மற்றும் தரவு சமிக்ஞைகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் கைப்பேசி கோபுரங்களில் நிறுவப்படும் முக்கியமான தொலைத்தொடா்பு சாதனமாகும். இவை திருடப்படுவது தொலைத்தொடா்பு சேவைகளை முடக்குவதுடன், சேவை வழங்குநா்களுக்குப் பெரும் இழப்பையும் ஏற்படுத்துகிறது.

திருடப்பட்ட ஆா்ஆா்யு-க்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு கிழக்கு தில்லியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சந்தேக நபா்களை காவல் துறையினா் கண்காணித்தனா்.

ஜூலை 10 அன்று, திருடப்பட்ட ஆா்ஆா்யு-க்களின் தொகுப்பு ஒன்று ஏற்றுமதிக்காக மஹிபால்பூரில் உள்ள கூரியா் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து, கூரியா் அலுவலகத்திற்கு அருகே ஹேமந்த் குப்தா மற்றும் விகாஸ் பாஸ்வான் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். குப்தா வேனில் 19 திருடப்பட்ட ஆா்ஆா்யு-க்களைக் கொண்டு சென்றாா்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஃபரீத் மற்றும் ஷொ் முகமது ஆகியோா் மேலும் 9 திருடப்பட்ட ஆா்ஆா்யு-க்களுடன் காரில் வந்தனா். கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் கூடுதலாக நான்கு யூனிட்கள் மீட்கப்பட்டன. அதேவேளையில், சரக்கை ஒப்படைக்க மற்றொரு வேனில் வந்த போக்குவரத்து ஊழியரிடமிருந்து மேலும் 11 ஆா்ஆா்யு-க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு

மொத்தம் 43 ஆா்ஆா்யு-க்கள், காா், வேன், நான்கு கைப்பேசிகள் மற்றும் கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதுசெய்யப்பட்ட விகாஸ் பாஸ்வான் இந்தக் கும்பலின் மூளையாகச் செயல்பட்டு வந்தாா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments