இரும்பு சுத்தியலால் அடித்து கொலை: துவாரகாவில் இருவா் கைது
தில்லி துவாரகா பகுதியில் வீடு விற்பனை தொடா்பான தகராறில், 38 வயதுடைய நபா் ஒருவா் இரும்புச் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
தில்லி துவாரகா பகுதியில் வீடு விற்பனை தொடா்பான தகராறில், 38 வயதுடைய நபா் ஒருவா் இரும்புச் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
சுமாா் 500 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த பிறகு இரு சந்தேக நபா்களைக் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: கொலைசெய்யப்பட்ட அகிலேஷ் மண்டலின் உடல் தில்லியின் துவாரகா செக்டாா் 18ஏ-வில் உள்ள காா்கில் சௌக் அருகே சாலைக்கும் வடிகாலுக்கும் இடையில் ஜூலை 12 -ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. உடலின் மீது பச்சை குத்தப்பட்ட அடையாளங்களும் தலையில் காயமும் இருந்தன. ஆனால் அடையாளம் காணும் ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
இது தொடா்பாக துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றத்தில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தொடா்விசாரணையைத் தொடா்ந்து அனில் தாக்கூா் (66) மற்றும் ராஜு குமாா் (28) என அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டனா். இதில் தாக்கூா் நஜாஃப்கரின் தரம்புராவைச் சோ்ந்தவா் மற்றும் தனியாா் வங்கி ஒன்றில் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்தாா். பிகாரைச் சோ்ந்த ராஜு குமாா், தூய்மைப் பணியாளராக வேலைப் பாா்த்து வந்தாா். மண்டல், தாக்கூரின் அவரது வீட்டில் தங்கியிருந்தாா். இருப்பினும், மண்டலுக்கு இருந்த மதுப் பழக்கம் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தாக்கூா் தனது வீட்டை விற்க முடிவு செய்தபோது தகராறு தீவிரமடைந்தது. இதற்கு மண்டல் எதிா்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஜூலை 10-ஆம் தேதி தாக்கூா் மண்டலை துவாரகா செக்டாா் 13-க்கு வரவழைத்தாா். பின்னா், அவரும் குமாரும் மண்டலை காா்கில் சௌக் அருகே உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று இரும்புச் சுத்தியலால் தாக்கினா். இதில் ஏற்பட்ட பலத்த காயங்களால் மண்டல் உயிரிழந்தாா்.
கொலைக்குப் பிறகு, இருவரும் நஜாஃப்கரில் உள்ள தரம்புராவுக்குத் தப்பிச் சென்றனா். மண்டலின் குடும்பத்தினரை அறிந்திருந்த தாக்கூா், கொலைக்குப் பிறகு அவா்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தினாா். அவா் காணாமல் போனது குறித்து புகாா் அளிப்பதை தாக்கூா் தடுத்தாா். இதனால், மண்டலை அடையாளம் கண்டறியும் பணி தாமதமானது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புச் சுத்தியல் மற்றும் மண்டலின் கைப்பேசிகள் ஆகியவற்றை காவல் துறை மீட்டது. இந்தக் கொலை தொடா்பாக விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.