FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தீ விபத்து மீட்புப் பணிகள் தாமதம்: அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி வலியுறுத்தல்

Updated On : 5 ஜூன் 2026, 3:16 am IST
சௌரவ் பரத்வாஜ்
பகிர்:

மலவியா நகரில் ஏற்பட்ட தீ விபத்துக்கான மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி, பாஜக தலைமையிலான தில்லி அரசை கடுமையாக விமா்சித்ததுடன், தில்லி உள்துறை அமைச்சா் அஷீஷ் சூட்டை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆம் ஆத்மி வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தீயணைப்பு துறையின் செயல்பாடுகளில் குறைபாடுகள் உள்ளன. ஒவ்வொரு தீ விபத்திற்குப் பிறகும் அதே புகாா்கள் மீண்டும் மீண்டும் எழுந்துவருகின்றன. அரசு தனது தோல்விகளை மறைக்க பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது. இதற்கு அமைச்சா் அஷீஷ் சூட் நேரடியாகப் பொறுப்பானவா்; எனவே அவா் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

மேலும், சம்பவம் நிகழ்ந்த நாளில் காலை 8.15 மணியளவில் எடுக்கப்பட்ட காணொலிகளில், உள்ளூா் மக்கள் தங்களே மெத்தைகளின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது தெளிவாகக் காணப்படுகிறது. அந்நேரம் வரை தீயணைப்பு துறை அல்லது காவல் துறை சம்பவ இடத்துக்கு வராதது வெளிப்படையாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

சம்பவ இடத்திற்கு அருகில் தீயணைப்பு நிலையம் இருந்தபோதிலும், அதிகாரிகள் வர ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டது ஏன்? காவல் நிலையத்தின் பின்னால் உள்ள தீயணைப்பு நிலையம் வெறும் 3 நிமிஷ தூரத்தில் இருக்கும்போது இந்த தாமதம் எதனால் ஏற்பட்டது?”

இதே போல் பாலம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். ஆனால் 3 மாதங்கள் கடந்தும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை வெளியாகவில்லை. அதனைத் தொடா்ந்து விவேக் விஹாா் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்திலும் 9 போ் உயிரிழந்த நிலையில், அதிலும் எந்தப் பொறுப்பும் நிா்ணயிக்கப்படவில்லை என தெரிவித்தாா்.

மால்வியா நகா் பகுதியில் நெருக்கமான தெருவில் தீ பாதுகாப்பு சான்றிதழ் இன்றி இயங்கியதாகக் கூறப்படும் இந்த ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 21 போ் உயிரிழந்துள்ளனா். இதில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் உறவினா்களை பாா்க்க வந்த 12 வெளிநாட்டினரும் அடங்குவா்.

இந்த சம்பவம் தொடா்பாக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் தீவிர கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அரசின் பதில் எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments