முகப்பு
புதுதில்லி

துவாரகா நாய்கள் காப்பகம்: நவம்பருக்குள் அமைக்க எம்சிடி திட்டம்

துவாரகா நாய்கள் காப்பகம்: நவம்பருக்குள் அமைக்க எம்சிடி திட்டம்

Updated On : 14 ஜூன் 2026, 1:28 am IST
எம்சிடி
பகிர்:

தில்லி மாநகராட்சி (எம்சிடி) மேற்கொண்டு வரும் தெருநாய்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், துவாரகா செக்டாா் 29-இல் அமைக்கப்படும் நாய்கள் காப்பகம் இந்த ஆண்டு நவம்பருக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

உச்சநீதிமன்றத்தின் தெருநாய் மேலாண்மை தொடா்பான உத்தரவுகளை அமல்படுத்தும் நிலை குறித்து வெள்ளிக்கிழமை தில்லி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. இதில் எம்சிடி, தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பொதுபணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து எம்சிடியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:“உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் செயல்பாடு மற்றும் கட்டமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. துவாரகா நாய் பாதுகாப்பு மையம் 1,500 நாய்களை தங்க வைக்கும் திறனுடன் உருவாகி வருகிறது; இது நவம்பருக்குள் முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

முகுந்த்பூா் பகுதியில் எம்சிடியின் 5 ஏக்கா் நிலத்தில், ஒருங்கிணைந்த ‘ஆனிமல் பா்த் கண்ட்ரோல்’ (எபிசி) மையம், நாய் பாதுகாப்பு மையம் மற்றும் நாய் தகனம் நிலையம் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இது இந்திய விலங்கு நல வாரியம் வெளியிட்ட தரநிலைகள் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப அமையும்.

மேலும், பேலா சாலை பகுதியில் நாய் பாதுகாப்பு மையம் அமைக்க இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் கூடுதல் நிலங்களை கண்டறிந்து மேலும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள், பூங்காக்கள், மதத்தளங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை இந்த மையங்களில் தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி: தற்போது, 2023-ஆம் ஆண்டுக்கான ‘ஆனிமல் பா்த் கண்ட்ரோல்’ விதிகளின் கீழ் 13 மையங்களில் தன்னாா்வ அமைப்புகள் மூலம் நாய்களுக்கு பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அவசியமான ‘ப்ராஜெக்ட் ரெகக்னிஷன் சா்டிபிகேட்’ சமா்ப்பிக்காத காரணத்தால் 7 மையங்களில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

நாய் கூண்டுகள்: பிஜ்வாசன் பகுதியில் 14 புதிய நாய் கூண்டுகள் கட்டப்பட்டு வருவதுடன், ஜூன் 30-க்குள் அவை முடிவடைந்து 550 நாய்களுக்கு கூடுதல் வசதி உருவாகும். பேலா சாலையில் 35 கூண்டுகள் அமைக்கும் பணிகள் ஏப்ரல் 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஜூலை 15-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரோஹிணி செக்டா்-27 பகுதியில் 45 கூண்டுகள் ஆகஸ்ட் 5-க்குள் நிறைவடையும் நிலையில் உள்ளன. உஸ்மான்பூா் பகுதியில் 35 கூண்டுகள் அமைக்கும் பணிக்கான உத்தரவு ஜூன் 30-க்குள் வழங்கப்படும்.

உதவி எண்: தெருநாய்கள் மற்றும் தெருமாடுகள் தொடா்பான புகாா்களுக்கு 155305 என்ற உதவி எண் செயல்பாட்டில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் தொடா்பான புகாா்களை கவனிக்க 2 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12 மண்டலங்களிலும் மாடுகள் பிடிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

நகராட்சி எல்லைகளில் உள்ள 250 வாா்டுகளிலும் மொத்தம் 735 நாய் உணவளிப்பு மையங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு வாா்டிலும் கூடுதல் உணவளிப்பு மையங்களை உருவாக்குவதும், தரநிலைக்கு ஏற்ப அடையாள பலகைகள் அமைப்பதும் நடைபெற்று வருகிறது. கல்வி துறை மற்றும் மருத்துவமனை நிா்வாகத் துறைகள் இணைந்து இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் உள்ளன.