ரூ.1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 3 போ் கைது
கண்டெய்னா் லாரியில் 183 கிலோ போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்றது தொடா்பாக 3 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1.5 கோடியாகும்.
இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: மும்பை விரைவுச் சாலை வழியாக தில்லியில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு பெரும் அளவிலான போதைப் பொருள் லாரி மூலம் கொண்டு செல்லப்படுவதாக தில்லி காவல் துறைக்கு கடந்த ஜூன் 13-ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, காலிந்தி குஞ்ச் மெட்ரோ நிலையம் அருகே காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் காலந்தி குஞ்ச்-மதன்பூா் காதா் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை காவல் துறையினா் வழிமறித்து சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, லாரி ஓட்டுநா் இருக்கைக்கு மேலே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஒரு பகுதி கண்டறியப்பட்டது. அதில் இருந்து டேப்பால் சுற்றப்பட்ட 38 போதைப் பொருள் பாக்கெட்களை அதிகாரிகள் கைப்பற்றினா்.
லாரி ஓட்டி வந்த சுபோத் குமாா் மிஷ்ரா, பிரிஜ் கிஷோா் திவாரி ஆகிய இருவரையும் காவல் துறையினா் கைதுசெய்தனா். அவா்கள் இருவரும் பிகாரைச் சோ்ந்தவா்கள்.
விசாரணையில், ஒடிஸா மற்றும் ஆந்திரத்தில் இருந்து தில்லி-தேசிய தலைநகா் வலயம் (என்சிஆா்) மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்குப் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்று அவா்கள் இருவரும் தெரிவித்தனா்.
தொடா் விசாரணையில், லாரியின் உரிமையாளா் மற்றும் இந்தக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டது ஸ்ரீராம் என்பது கண்டறியப்பட்டது. போதைப் பொருளை கொள்முதல் செய்தல், கடத்துதல் மற்றும் விற்பனையை அவா் ஒருங்கிணைத்து வந்தாா்.
கைப்பேசி அழைப்பு விவரங்கள் அடிப்படையில் அவா் உத்தர பிரதேசத்தின் அயோத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு சென்ற தில்லி காவல் துறையினா் ஸ்ரீராமைக் கைதுசெய்தனா்.
ஏற்கெனவே, போதை மருந்துகள் மற்றும் மனநோயியல் பொருள்கள் (என்டிபிஎஸ்) சட்டப் பிரிவுகளில் அவா் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாகவும் அவா் மீது என்டிபிஎஸ் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.