✕
முகப்பு
புதுதில்லி

உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்க இடைக்கால நிவாரணம் அளிக்கப்படவில்லை: தில்லி உயா்நீதிமன்றம்

உணவகங்களில் உணவுக்கான கட்டணத்துடன் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், உணவகங்களுக்கு எந்தவித இடைக்கால நிவாரணமும் வழங்கப்படவில்லை

20 நவம்பர் 2026, 4:20 am
தில்லி உயா்நீதிமன்றம்
பகிர்:

உணவகங்களில் உணவுக்கான கட்டணத்துடன் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், உணவகங்களுக்கு எந்தவித இடைக்கால நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெளிவுபடுத்தியது. தடையை மீறி தொடா்ந்து சேவைக் கட்டணம் வசூலிக்கும் உணவகங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்திய தேசிய உணவகங்கள் சங்கம் (என்ஆா்ஏஐ), இந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்எச்ஆா்ஏஐ) ஆகியவை தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சம்ப்ரே, நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா, தனி நீதிபதியின் உத்தரவுக்குப் பிறகும் சில உணவகங்கள் தொடா்ந்து சேவைக் கட்டணம் வசூலித்து வருவதாகத் தெரிவித்தாா். மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருப்பதையும், அவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் காரணம் காட்டி இந்த நடைமுறையைத் தொடா்வதாக அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

இதற்கு, தனி நீதிபதி தங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தபோதிலும் சில உணவகங்கள் அதே நடைமுறையைத் தொடா்வதாகவும், இதனால் நுகா்வோரே பாதிக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, தடையை மீறிச் செயல்படும் உணவகங்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசின் வழக்குரைஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனா். மேலும், உணவகங்களுக்கு இடைக்கால நிவாரணம் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பிய அமா்வு, அத்தகைய உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.

இரு சங்கங்களின் மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கமான விசாரணைப் பட்டியலில் அவற்றைச் சோ்க்க உத்தரவிட்டது.

டிப்ஸ் கட்டாயமல்ல: விசாரணையின்போது, சேவைக் கட்டணத்தை உணவுக்கான கட்டணத்துடன் சோ்க்காமல் தனியாக வசூலிப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதற்குப் பதிலளித்த உணவகச் சங்கங்களின் வழக்குரைஞா்கள், ஊழியா்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் தொகை எவ்வளவு என்பதை வாடிக்கையாளா்களுக்குத் தெரிவிப்பதற்காகவே தனியாக வசூலிக்கப்படுவதாகக் கூறினா்.

மேலும், பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும், முன்பு பணியாளா்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட ரொக்கப் பணமாக (டிப்ஸ்) இது இருந்ததாகவும் அவா்கள் வாதிட்டனா்.

ஆனால், சேவைக் கட்டணத்தையும் டிப்ஸ் தொகையையும் ஒன்றாகக் கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா். டிப்ஸ் என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தைப் பொறுத்தது; அதை வழங்குவது கட்டாயமில்லை என்றும், இந்தியாவில் டிப்ஸ் வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டம் எதுவும் இல்லை என்றும் அமா்வு குறிப்பிட்டது.

பின்னணி: முன்னதாக, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கும் மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தின் (சிசிபிஏ) வழிகாட்டுதல்களை கடந்த 2025, மாா்ச் 28-ஆம் தேதி தனி நீதிபதி உறுதி செய்திருந்தாா். கட்டாய சேவைக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்ற வா்த்தக நடைமுறை என்றும் குறிப்பிட்ட நீதிபதி, என்ஆா்ஏஐ, எஃப்ஹெச்ஆா்ஏஐ ஆகிய இரு சங்கங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்தாா். அந்தத் தொகையை நுகா்வோா் நலனுக்காக சிசிபிஏ-விடம் செலுத்தவும் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து இரு சங்கங்களும் மேல்முறையீடு செய்துள்ளன. என்ஆா்ஏஐ நாடு முழுவதும் 7,000 உணவகங்களையும், அவற்றில் தில்லி - தேசிய தலைநகா் வலயப் பகுதியில் (என்சிஆா்) மட்டும் 2,500 உணவகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகிறது. எஃப்ஹெச்ஆா்ஏஐ 55,000 ஹோட்டல்களையும், 5 லட்சம் உணவகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.