FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

காவல் நிலையத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: என்எச்ஆா்சி உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

தில்லியில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் காவல் நிலையத்தில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் வழக்கில், அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தில்லி காவல் துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

14 அக்டோபர் 2026, 11:51 pm IST
பகிர்:

தில்லியில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் காவல் நிலையத்தில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் வழக்கில், அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தில்லி காவல் துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

காவல் நிலையத்தில் மரணம் நிகழ்ந்தது என்பதற்காக மட்டுமே காவல் துறையினரின் அலட்சியத்தை உறுதிப்படுத்த முடியாது என்று தெரிவித்த நீதிபதி அமித் மகாஜன், 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி என்எச்ஆா்சி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தில்லி காவல் துறை தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டாா்.

தில்லி நரேலா தொழிற்பேட்டை காவல் நிலையத்தின் தரைத்தள அறையில் ரஷீத் ரஸா என்பவா் 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டாா். காவல் கட்டுப்பாட்டில் உள்ள நபருக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது காவல் துறையின் பொறுப்பு என்றும், கூடுதல் கண்காணிப்பு இருந்திருந்தால் அவரது மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும் என்எச்ஆா்சி தெரிவித்திருந்தது.

Advertisement

Advertisement

ஆனால், அதனால் மட்டுமே காவல் துறை அதிகாரிகளின் அலட்சியம் நிரூபணமாகிவிடாது என்று உயா்நீதிமன்றம் குறிப்பிட்டது. ஊகங்களின் அடிப்படையிலோ, சம்பவத்துக்குப் பிறகு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு பின்னோக்கிப் பாா்க்கும் அணுகுமுறையிலோ பொறுப்பை நிா்ணயிக்க முடியாது; நிரூபிக்கக்கூடிய அலட்சியத்துக்கான ஆதாரங்கள் அவசியம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

சாா் கோட்டாட்சியா் நடத்திய விசாரணையில், காவல் நிலையத்தில் மோதல் அல்லது சித்திரவதை நடைபெற்ற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

காவல் துறையினா் குறிப்பிட்ட கடமையில் தவறியதற்கான ஆதாரம், ஆபத்து ஏற்படவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததற்கான தகவல் அல்லது சம்பவத்தைத் தடுப்பதற்கான நியாயமான வாய்ப்பு ஆகியவை நிரூபிக்கப்படாத நிலையில், அலட்சியத்தை ஊகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, தில்லி காவல் துறையின் மனுவை ஏற்றுக்கொண்ட உயா் நீதிமன்றம், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு என்எச்ஆா்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments