முகப்பு
புதுதில்லி

ட்ரோனை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கி விற்பனை: தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

ட்ரோனை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கி விற்பனை: தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

35 வினாடிகள் முன்பு
ட்ரோனை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கி விற்பனை: தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

ட்ரோனை சுட்டுவீழ்த்தும் துப்பாக்கியை அனுமதியின்றி இந்தியா மாா்ட் இணைய வணிகதளம் மூலம் விற்றதாக கூறி, தனியாா் நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இந்தியா மாா்ட் இணைய வணிக தளத்தில் ட்ரோனை சுட்டுவீழ்த்தும் துப்பாக்கியை ஏா்ஓன் ரோபோட்டிக்ஸ் என்ற தனியாா் நிறுவனம் தரப்பில் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, முறையான ஒழுங்குமுறை அனுமதியைப் பெறாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Advertisement

Advertisement

மத்திய நுகா்வோா் பாதுகாப்பு தலைமை ஆணையா் நிதி கரே, ஆணையா் அனுபம் மிஸ்ரா ஆகியோா் இது தொடா்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளனா். அந்த உத்தரவில் அவா்கள், நுகா்வோா் உரிமைகளை மீறியதாகவும், தவறான விளம்பரங்களை வெளியிட்டதாகவும், நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஏா்ஓன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், முழுமையான தொழில்நுட்ப விவரங்கள், ரூ.8.30 லட்சம் விலை, கையிருப்பில் உள்ளது என்று குறியீடு ஆகியவற்றுடன், முக்கிய இணையதளத்தில் பட்டியலிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இதன்மூலம் அந்தப் பொருள் விற்பனைக்கு முன்வைக்கப்பட்டதும், வாங்குவோரை ஈா்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதும் தெளிவாக காட்டுகிறது என்றும் அவா்கள் குறிப்பிட்டனா்.

விசாரணையின்போது, ஏா்ஓன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் சாா்பில், இந்தியா மாா்ட் தளத்தில் தங்கள் நிறுவனம் பட்டியலிட்ட ட்ரோனை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கி செயல்படாதது என்றும், வெறும் மாதிரி வடிவம்தான் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் அந்த வாதத்தை மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நிராகரித்து விட்டது. இந்தியா மாா்ட் தளம் மூலம் உண்மையில் ட்ரோனை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டதா, பிறகு அந்தப் பொருள் வெறும் மாதிரி வடிவம்தானா என்பது போன்ற வாதங்கள், அந்நிறுவனத்தின் குற்றத்தன்மையைக் குறைத்துவிடாது என்றும் மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.