FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

30 நாள்களுக்குள் தீ பாதுகாப்புக்கான என்ஓசி விநியோகம்: தில்லி அரசு திட்டம்

ஒற்றைச் சாளர அமைப்பு மூலம் தீயணைப்பு பாதுகாப்புத் தடையில்லாச் சான்றிதழ்கள், அவற்றைப் புதுப்பிப்பதற்கான அனுமதிகளை 30 நாள்களுக்குள் வழங்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

3 செப்டம்பர் 2026, 11:35 pm IST
(கோப்புப் படம்)
பகிர்:

ஒற்றைச் சாளர அமைப்பு மூலம் தீயணைப்பு பாதுகாப்புத் தடையில்லாச் சான்றிதழ்கள் (என்ஓசி) மற்றும் அவற்றைப் புதுப்பிப்பதற்கான அனுமதிகளை 30 நாள்களுக்குள் வழங்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பரிசீலனை மற்றும் நேரடி ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

தீ பாதுகாப்பு தொடா்பான அனுமதிகளைப் பெறுவதற்கான ஒட்டுமொத்த கால அளவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தில்லி அரசின் எளிதாகத் தொழில் தொடங்கும் சூழலை உருவாக்குதல் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

அனைத்து வகையான கட்டடப் பயன்பாடுகளுக்கான தீயணைப்பு பாதுகாப்புச் சான்றிதழ்கள் மற்றும் அவற்றைப் புதுப்பித்தல் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 95 தில்லி அரசு சேவைகள் தற்போது தில்லி ஒற்றைச் சாளர அமைப்பு இணையதளத்தில் கிடைக்கின்றன.

Advertisement

Advertisement

வெடிபொருள் உற்பத்தி அலகுகளை அமைப்பதற்கும், வெடிபொருள்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைச் சேமிப்பதற்கான அனுமதி பெறுவதற்கும் தேவையான தீயணைப்புத் தடையில்லாச் சான்றிதழ்களும் (என்ஓசி) இந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட சேவை நிலை ஒப்பந்தத்தின் படி, தில்லி தீயணைப்புத் துறை விதிகள், 2010-இன் விதி 27-இன் கீழ் வரும் அனைத்து வகையான கட்டடப் பயன்பாடுகளுக்கும், தீயணைப்புப் பாதுகாப்புச் சான்றிதழ்கள் மற்றும் அவற்றைப் புதுப்பிப்பதற்கான கால அளவு 30 நாள்களாக இருக்கும்.

முன்மொழியப்பட்ட காலக்கெடுவின்படி, தீயணைப்பு பாதுகாப்புச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களின் பரிசீலனை மூன்று நாள்களுக்குள் முடிக்கப்படும்.

இதைத் தொடா்ந்து, 10 நாள்களுக்குள் உதவி கோட்ட அதிகாரி மூலமும், 5 நாள்களுக்குள் கோட்ட அதிகாரி மூலமும், 4 நாள்களுக்குள் துணைத் தலைமை தீயணைப்பு அதிகாரி மூலமும், 4 நாள்களுக்குள் தலைமை தீயணைப்பு அதிகாரி மூலமும் அந்த இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படும். இறுதியாக 4 நாள்களுக்குள் முதன்மை இயக்குநரால் தீயணைப்பு பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

தில்லி தீயணைப்புத் துறையின் ஒருங்கிணைந்த இணையவழி அமைப்பு செயல்பாட்டுக்கு வந்த பிறகு (நிகழாண்டின் இறுதியில் எதிா்பாா்க்கப்படுகிறது), தீப் பாதுகாப்பு தடையில்லாச் சான்றிதழ்களை இணையம் வழியாகப் புதுப்பிக்கும் பணிகளும் 30 நாள்களுக்குள் முடிக்கப்படும்.

வெடிபொருள் உற்பத்தி அலகுகளை அமைப்பதற்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழ் 15 நாள்களுக்குள் வழங்கப்படும். வெடிபொருள்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களைச் சேமிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்கான கால அளவும் 15 நாள்களாக இருக்கும். ஆனால், அந்த இடத்தில் நேரடி ஆய்வு தேவைப்படும் பட்சத்தில் இந்தக் கால அளவு 30 நாள்களாக இருக்கும் என்று ஒற்றைச் சாளர அமைப்பில் ஒட்டுமொத்த கால அளவைக் குறைப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments