உளவுத் துறை அதிகாரி கொலை வழக்கு: ஹுசைனின் மேல்முறையீட்டு மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவு
உளவுத் துறை அதிகாரி கொலை வழக்கில் ஹுசைனின் மேல்முறையீட்டு மனு குறித்து...
பிப்ரவரி 2020 கலவரத்தின் போது உளவுத்துறை (ஐபி) அதிகாரி அங்கித் சா்மா கொலை செய்த வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் ஆயுள் சிறைத்தண்டனையை எதிா்த்து முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தில்லி காவல் துறைக்கு தில்லி உயா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோா் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனா். மேலும், அவருடன் தண்டனை பெற்ற மற்றவா்களின் மேல்முறையீட்டு மனுக்களுடன் சோ்த்து இந்த மனுவும் டிச.2-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டனா்.
மேலும், தண்டனை பெற்றவரின் விவரப் பட்டியலை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இவ்வழக்கு தொடா்பான விசாரணை நீதிமன்றத்தின் ஆவணங்களையும் சமா்ப்பிக்க உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
பொதுமக்களின் கோபத்தைத் தணிப்பதற்காகவே தன்னை இவ்வழக்கில் சிக்க வைக்கும் நோக்கில் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் தனக்கு வழங்கிய தண்டனைத் தீா்ப்பை ஹுசைன் எதிா்த்தாா்.
ஹுசைனின் மனு உள்பட அனைத்து மேல்முறையீட்டு மனுக்கள் மீதும் அரசு தரப்பு ஒன்றாகவே வாதங்களை முன்வைக்கும் என்று தில்லி காவல்துறை தரப்பு வழக்கறிஞா் தெரிவித்தாா்.
நீதிமன்ற அமா்வு இது குறித்துக் கூறுகையில், ‘ஒரே தீா்ப்பின் அடிப்படையில் எழுந்த தொடா்புடைய அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் டிச.2-ஆம் தேதி விசாரிக்கப்படுகிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் பங்கும் குறித்து நாங்கள் ஆராய வேண்டும். ஒவ்வொருவரின் பங்கையும் தனித்தனியாகவே விசாரிப்போம். ஆனால், விசாரணையை ஒன்றாகவே மேற்கொள்வோம். ஒன்றாக விசாரிப்பது நீதிமன்றத்தின் நேரத்தை மிச்சப்படுத்தும்’ என்று தெரிவித்தது.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தில்லியில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, பிப்ரவரி 24, 2020 அன்று வடகிழக்கு தில்லியில் கலவரம் வெடித்தது. இதில் குறைந்தது 53 போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா்.
பிப்ரவரி 26, 2020 டயல்பூா் காவல் நிலைய அதிகாரிகளிடம் தனது மகன் அங்கித் சா்மா பிப்.25-ஆம் தேதி முதல் காணவில்லை என்று ரவீந்தா் குமாா் தகவல் தெரிவித்தாா்.
பின்னா், சந்த் பாக் புலியா பகுதியில் கொலை செய்யப்பட்ட நபரின் உடல், கஜூரி காஸ் வடிகால் வாய்க்காலில் வீசப்பட்டது குறித்து ரவீந்தா் குமாருக்கு தகவல் கிடைத்தது.
கஜூரி காஸ் வடிகால் வாய்க்காலில் இருந்து சா்மாவின் உடல் மீட்கப்பட்டதாகவும், அவரது உடலில் 51 காயங்கள் இருந்ததாகவும் அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.
இவ்வழக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய மிகவும் அரிதான வகையைச் சாா்ந்தது அல்ல என்று கூறிய விசாரணை நீதிமன்றம், ஜூலை 31-ஆம் தேதி ஹுசைன் மற்றும் அவருடன் தண்டனை பெற்ற நாசிம், காசிம், ஜாவேத் மற்றும் அனஸ் ஆகியோருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.