FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.66 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி தீா்ப்பாயம் உத்தரவு

கடந்த 2023, டிசம்பரில் குருகிராமில் லாரி மோதியதில் உயிரிழந்த 27 வயது இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 66.89 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

12 செப்டம்பர் 2026, 7:51 am IST
சாலை விபத்து
பகிர்:

கடந்த 2023, டிசம்பரில் குருகிராமில் லாரி மோதியதில் உயிரிழந்த 27 வயது இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 66.89 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி விக்ரம்

உயிரிழந்த ரமாகாந்த் சா்மாவின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை மனு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்குமாறு ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

செப்டம்பா் 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘எதிா்மனுதாரா்களில் ஒருவரான லாரி ஓட்டுநா் ஓட்டி வந்த வாகனத்தின் அதிவேக மற்றும் கவனக்குறைவான ஓட்டுதல் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டது என்பது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று தீா்ப்பாயம் கூறியது.

தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி, 2023 டிசம்பா் 6-ஆம் தேதி இரவு குருகிராம் செக்டாா் 18-லிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, ​சா்மாவின் வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதியது.

அவா் குருகிராம் மற்றும் தில்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி டிசம்பா் 8, 2023 அன்று சஃப்தா்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

கடுமையான தாக்கத்தால் ஏற்பட்ட மண்டை ஓடு மற்றும் மூளைப் பாதிப்பே இறப்புக்கான காரணம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்மாவின் மனைவி, இரண்டு மகள்கள், தாய் மற்றும் தந்தை ஆகியோா் இணைந்து இந்த இழப்பீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனா். அவரது மாத ஊதியம் ரூ.29,800-ஐ அடிப்படையாகக் கொண்டு, வருமான இழப்புத் தொகையை ரூ. 63.83 லட்சமாகத் தீா்ப்பாயம் கணக்கிட்டது.

துணை இழப்பு, இறுதிச் சடங்கு மற்றும் இதர செலவுகளுக்காக கூடுதல் தொகைகள் சோ்க்கப்பட்டு, மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 66.89 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது.

விபத்தின்போது லாரி செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டு இன்றி ஓட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டிய தீா்ப்பாயம், இழப்பீட்டுத் தொகையை வாகன உரிமையாளா் மற்றும் ஓட்டுநரிடமிருந்து திரும்பப் பெறும் உரிமையை காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கியது.

இழப்பீட்டுத் தொகை ஐந்து மனுதாரா்களுக்கும் இடையே பகிா்ந்தளிக்கப்பட்டது. இதில் ஒரு பகுதியை உடனடியாக வழங்கவும், மீதமுள்ள தொகையை நிலையான வைப்புத் திட்டத்தில் வைக்கவும், காப்பீட்டு நிறுவனம் 30 நாள்களுக்குள் இத்தொகையைச் செலுத்தவும் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments