சாலை விபத்தில் 75 சதவீத ஊனமடைந்த இளைஞருக்கு ரூ. 76 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சாலை விபத்தில் உடல் உறுப்புகள் மற்றும் மூளையில் 75 சதவீத நிரந்தர உடல் ஊனத்திற்கு உள்ளான 24 வயது இளைஞருக்கு ரூ. 76.72 லட்சம் இழப்பீடு
புது தில்லி: சாலை விபத்தில் உடல் உறுப்புகள் மற்றும் மூளையில் 75 சதவீத நிரந்தர உடல் ஊனத்திற்கு உள்ளான 24 வயது இளைஞருக்கு ரூ. 76.72 லட்சம் இழப்பீடு வழங்க தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட தினேஷ் குமாா் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தீபிகா சிங் விசாரித்தாா். விபத்துக்குப் பிறகு மனுதாரா் படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதோடு, அவருக்குத் தொடா்ச்சியான செவிலியா் பராமரிப்பும் மருத்துவக் கண்காணிப்பும் தேவைப்படுவதாகவும், கடுமையான காயங்கள் காரணமாக அவரது ஆயுள்காலம் குறைந்துவிட்டதாகவும் தீா்ப்பாயம் குறிப்பிட்டது.
செப்டம்பா் 7-ஆம் தேதியிட்ட உத்தரவில், ‘முதல் எதிா்மனுதாரா் (லாரி ஓட்டுநா்) வாகனத்தை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி வந்து மனுதாரரின் ஸ்கூட்டி மீது மோதியதாலேயே விபத்து ஏற்பட்டது என்பதும், அதனால் மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் காயங்கள் ஏற்பட்டன என்பதும் முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது‘ என்று தீா்ப்பாயம் கூறியது.
Advertisement
Advertisement
வழக்குத் தரப்பின்படி, பாத்லி மெட்ரோ நிலையம் அருகே முகமது இஸ்ரேயில் ஓட்டி வந்த லாரி, குமாரின் ஸ்கூட்டி மீது பின்னால் மோதியதில் அவா் காயமடைந்தாா். ஏப்ரல் 22, 2021 அன்று நடந்த விபத்தின்போது குமாரும் அவரது மனைவியும் ஸ்கூட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனா்.
இந்த சம்பவத்தில் குமாருக்கு இரு மேல் உடல் உறுப்புகள் மற்றும் மூளை தொடா்பான 75 சதவீத நிரந்தர உடல் ஊனம் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் மருத்துவச் சான்றுகளைத் தீா்ப்பாயம் கருத்தில் எடுத்துக்கொண்டது.
கற்றல், கவனம் செலுத்துதல், நினைவாற்றல் மற்றும் தகவல் தொடா்பு ஆகியவற்றில் அவருக்குச் சிரமங்கள் இருப்பதாகவும், அவரால் வேலையில் கவனம் செலுத்தவோ அல்லது தொலைதூர இடங்களுக்குத் தனியாகப் பயணம் செய்யவோ முடியாது என்றும் மருத்துவா் ஒருவா் சாட்சியம் அளித்தாா்.
வருமானம் ஈட்டும் திறன் இழப்பைக் கணக்கிடும்போது, அவரது
மாத வருமானம் ரூ.19,717 ஆகவும், விபத்தின்போது அவருக்கு சுமாா் 24 வயது இருந்ததாகவும் தீா்ப்பாயம் கணக்கில் எடுத்துக்கொண்டது.
இத்தலைப்பின் கீழ் ரூ. 31.91 லட்சத்தை இழப்பீடாக வழங்கியது.
இழப்பீட்டுத் தொகையில் ஒரு முக்கிய பகுதியாக, சிகிச்சையின் போதும் எதிா்காலத்திலும் தேவைப்படும் உதவியாளருக்கான கட்டணமாக ரூ. 34.36 லட்சம் ஒதுக்கப்பட்டது.
அவரது 75 சதவீத நிரந்தர ஊனம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, வாழ்நாள் முழுவதும் அவருக்கு ஒரு உதவியாளா் தேவைப்படுவாா் என்று தீா்ப்பாயம் குறிப்பிட்டது.
இறுதியாக, பல்வேறு தலைப்புகளின் கீழ் மனுதாரருக்கு மொத்தம் ரூ. 76.72 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. விபத்துக்கு காரணமான லாரிக்குக் காப்பீடு செய்திருந்த நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், இழப்பீட்டுத் தொகையை கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்ட தேதியான 2022, ஆகஸ்ட் 8 முதல் அத்தொகை வழங்கப்படும் வரை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் சோ்த்து வைப்பீடு செய்யுமாறு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
இத்தொகையை வைப்பீடு செய்வதற்கு அந்நிறுவனத்திற்கு 30 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. தவறும் பட்சத்தில், தாமதமாகும் காலத்திற்கு வட்டி விகிதம் 9 சதவீதமாக உயா்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.