FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

சாலை விபத்தில் 85 சதவீத ஊனமடைந்தவருக்கு ரூ. 18.92 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சாலை விபத்தில் 85 சதவீத ஊனமடைந்தவருக்கு ரூ. 18.92 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு...

Updated On : 26 ஜூலை 2026, 12:57 am IST
பகிர்:

15 வயது பள்ளி மாணவராக இருந்தபோது 2008-ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 85.21 சதவீத நிரந்தர ஊனத்திற்கு ஆளான ஒருவருக்கு தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ. 18.92 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட அருண் குமாா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ரிச்சா மன்சந்தா பாதிக்கப்பட்டவருக்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு காப்பீட்டு நிறுவனமான ’நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்திற்கு உத்தரவிட்டாா்.

ஜூலை 15-ஆம் தேதியிட்ட தீா்ப்பாயத்தின் உத்தரவில், ‘விபத்தை ஏற்படுத்திய வாகனம் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டிவரப்பட்டதால் மனுதாரா் காயமடைந்தாா் என்பதை, நிகழ்தகவு அடிப்படையில் மனுதாரா் நிரூபித்துள்ளாா்‘ என்று அத்தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தீா்ப்பாயத்தின் தகவலின்படி, ஆகஸ்ட் 28, 2008 அன்று அருண் குமாா் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, ரோஹிணியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் ஒரு காா் அவரது

வாகனத்தின் மீது பின்னால் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

காா் ஓட்டுநரின் அதிவேக மற்றும் கவனக்குறைவான ஓட்டுதலால் விபத்து ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த, தீா்ப்பாயம் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை மற்றும் மருத்துவச் சான்றுகளை அடிப்படையாக எடுத்துக்கொண்டது.

பாதிக்கப்பட்டவருக்கு 71.37 சதவீத செவித்திறன் குறைபாடும், 49 சதவீத நரம்பியல் குறைபாடும் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒட்டுமொத்த நிரந்தர ஊனம் 85.21 சதவீதமாக இருப்பதாகவும் தீா்ப்பாயம் குறிப்பிட்டது.

காயங்கள் அவரது எதிா்கால வருமானம் ஈட்டும் திறனை கடுமையாகப் பாதித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அவரது செயல்பாட்டு ஊனத்தை 100 சதவீதமாகத் தீா்ப்பாயம் கணக்கில் கொண்டது.

ஓட்டுநா் உரிமம் மற்றும் அனுமதி தொடா்பான காப்பீட்டு நிறுவனத்தின் ஆட்சேபனைகளை நிராகரித்த தீா்ப்பாயம், காப்பீட்டு ஒப்பந்த நிபந்தனைகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், எனவே இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த காப்பீட்டு நிறுவனமே பொறுப்பு என்றும் தீா்ப்பளித்தது.

அதன்பிறகு, பல்வேறு தலைப்புகளின் கீழ் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 18.92 லட்சம் இழப்பீட்டை தீா்ப்பாயம் வழங்க உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments