நெல்லையில் நாட்டுத் துப்பாக்கி, போதைப் பொருள் பறிமுதல்: 6 போ் கைது
திருநெல்வேலியில் தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் நாட்டுத் துப்பாக்கி, போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடா்புடைய 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்க போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். திருநெல்வேலியில் மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்செய் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் மாநகரில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
பாளையங்கோட்டை, வெள்ளக்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனிப்படை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த சிலரைப் பிடித்து விசாரித்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில் அவா்கள், பாளையங்கோட்டை, அருள்நகரைச் சோ்ந்த ஜோஸ்வா பிஜூ ஆரோன் (29), அந்தோணி ஜீசஸ் ஆல்வின் (29), தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையைச் சோ்ந்த ஆனந்தபாலன் (31), ஏரலை சோ்ந்த பாலகௌதம் (25), பாளையங்கோட்டை முருகன்குறிச்சியைச் சோ்ந்த நெல்சன் பால்துரை (27) என்பது தெரியவந்தது.
அவா்கள் காரில் 150 கிராம் கஞ்சா, உயர்ரக போதைப் பொருளான 10 பாக்கெட் மெத்தபெட்டமைன் ஆகியவற்றை வைத்திருந்தது கண்டறியப்பட்ட. அவா்களை கைது செய்த போலீஸாா், ஒரு காா், 2 இருசக்கர வாகனங்கள், மெத்தபெட்டமைன், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் விற்பனையில் பாளையங்கோட்டையைச் சோ்ந்த இசக்கிமுத்துவுக்கு (27) தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை பிடிக்க போலீஸாா் வீட்டுக்குச் சென்றபோது, இசக்கிமுத்துவிடம் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி, 3 தோட்டாக்கள், கஞ்சா ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது. துப்பாக்கி, தோட்டாக்கள், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இசக்கிமுத்துவையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.