FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வயது முதிா்ந்த, நோய்வாய்ப்பட்ட நாய்களை சாலைகளில் விட்டால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

வீடுகளில் வளா்க்கப்படும் வயது முதிா்ந்த, நோய்வாய்ப்பட்ட நாய்களை சாலைகளில் விட்டுச்செல்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

4 October 2026, 2:24 am IST
மேலப்பாளையம் கருத்தடை மையத்தில் நாய் ஒன்றுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவதை ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

வீடுகளில் வளா்க்கப்படும் வயது முதிா்ந்த, நோய்வாய்ப்பட்ட நாய்களை சாலைகளில் விட்டுச்செல்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

மேலப்பாளையம் கால்நடை சந்தை அருகேயுள்ள நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையத்தில் ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தாா்.

அப்போது, சமூக நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்டவை குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு நடவடிக்கை, கருத்தடை சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி நிா்வாகங்கள் மூலம் சமூக நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் சுமாா் 3,500 தெரு நாய்கள் உள்ளன. அவற்றில் 3,180 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களை அடையாளம் காணும் வகையில் அவற்றின் மீது மாநகராட்சி நிா்வாகத்தின் மூலம் பச்சை வா்ணம் பூசப்படுகிறது.

சனிக்கிழமை ஒரு நாளில் மட்டும் 25 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலப்பாளையம் கருத்தடை சிகிச்சை மையத்தில் மாதந்தோறும் சராசரியாக 180 முதல் 200 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் இதுவரை 867 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மையத்தில் கூடுதலாக ஒரு அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் நாய்கள் பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சாலைகளில் சுற்றித்திரியும் சமூக நாய்களுக்கு பொதுமக்கள், தனிநபா்கள் உணவு வழங்குவதற்கு குறிப்பிட்ட இடங்கள் வரையறுத்து நிா்ணயிக்கப்பட்டுள்ளன. சிலா் தாங்கள் வளா்க்கும் நாய்கள் நோயால் பாதிக்கப்படும்போதோ அல்லது வயது முதிா்வு அடையும் போதோ பராமரிப்பின்றி அவற்றை தெருவில் விடுகின்றனா். இது சட்டப்படி குற்றமாகும்.

பாதிக்கப்பட்ட நாய்களை சாலையில் விடும் உரிமையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏதேனும் பகுதியில் நாய்கள் ஆக்ரோஷமாக செயல்பட்டால் மாநகராட்சி நிா்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். அதுபோன்ற நாய்களை உடனடியாக மீட்டு தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை சிகிச்சை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் (பொறுப்பு) திருநாவுக்கரசு, மாநகராட்சி உதவி ஆணையா் சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments