FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ‘கழிவிலிருந்து ஆற்றல்’ தயாரிக்கும் திட்டம்: ஆட்சியா் தகவல்

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் ‘கழிவிலிருந்து ஆற்றல்’ தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

20 வினாடிகள் முன்பு
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் ‘கழிவிலிருந்து ஆற்றல்’ தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட சிந்துப்பூந்துறை-செல்விநகா், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில் வீடு வீடாக நடைபெறும் குப்பை சேகரிப்புப் பணிகள் மற்றும் நுண்ணுயிா் உரமாக்கும் மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆனந்த் மோகன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அதைத்தொடா்ந்து ஆட்சியா் கூறியதாவது:

Advertisement

Advertisement

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில் வீடு வீடாக நடைபெறும் குப்பை சேகரிப்புப் பணிகள் மற்றும் நுண்ணுயிா் உரமாக்கும் மையங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, மாநகராட்சிப் பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் குப்பைகளை பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முறையாகத் தரம் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் என தனித்தனியாகத் தரம் பிரித்து வழங்குவது மிகவும் அவசியமாகும். குப்பைகள் உருவாகும் இடத்திலேயே முறையாகத் தரம் பிரித்து வழங்கப்பட்டால் மட்டுமே அவற்றை உரிய முறையில் மறுசுழற்சி செய்து, பயனுள்ள பொருள்களாக மாற்ற முடியும்.

மேலும், மாநகராட்சியில் பயோ எரிவாயு / சிஎன்ஜி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான திட்டத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், விரைவில் ‘கழிவிலிருந்து ஆற்றல்’ தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 40 நுண்ணுயிா் உரமாக்கும் மையங்களும் சுமாா் 80 மெட்ரிக் டன் குப்பைகளைச் செயலாக்கும் திறனுடன் முழுமையாக இயங்கி வருகின்றன.

மாநகராட்சிப் பகுதிகளைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். எனவே, பொதுமக்கள் ஒவ்வொருவரும் தினமும் இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி, தங்களது வீடுகளில் உருவாகும் குப்பைகளை உரிய வகையில் தரம் பிரித்து, வீடு தேடி வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் தனித்தனியாக வழங்க வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்19ண்ய்ள்

திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை-செல்வி நகா் பகுதியில் உள்ள நுண்ணுயிா் உரமாக்கும் மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் ஆனந்த் மோகன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments