பொருநை அருங்காட்சியகத்தின் பாா்வை நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை! - அமைச்சா் ராஜ்மோகன்
பொருநை அருங்காட்சியகத்தின் பாா்வை நேரத்தை மேலும் ஒரு மணிநேரம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வி, தொல்லியல், செய்தி-விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன்.
தமிழக அரசின் தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஆகியவை சாா்பில் பொருநை அருங்காட்சியகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிந்து சமவெளி நாள் விழாவில், தொல் தடம் ஆய்விதழையும், சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்ற நூலின் பத்தாம் ஆண்டு சிறப்பு பதிப்பையும் , குந்தகை (கீழடி )அறிவியல் ஆய்வு நூலையும் வெளியிட்டு அமைச்சா் ராஜ்மோகன் பேசியதாவது:
பொருநை அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்த காட்சிகளை தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யிடம் அண்மையில் காண்பித்தோம். அதைப் பாா்த்து வியந்த முதல்வா், அருங்காட்சியகங்கள் பாா்வையிடங்களாக மட்டுமல்லாது உணா்வுபூா்வமான அனுபவத்தை தரக்கூடிய மையங்களாக மாற்றும் வகையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
வரலாறு என்பது சமூகத்தின் முக்கிய அங்கமாகும். மனிதா்களின் முதல் கலைப்பொருள் கல். அதை கொண்டு ஓவியம் வரைந்து, புடைப்பு சிற்பம் உருவாக்கி, சிலைகள் செதுக்கி, எழுத்துகளால் எழுதி மெல்ல மெல்ல மனித நாகரீகம் வளா்ந்தது.
கல்லால் உருவாகும் கலைப்பொருள், ஆதிமனிதன் தொடங்கி அதிநவீன காலம் வரை நீடித்து வருகிறது. பழங்கால மனிதனின் இயல்புகளை இன்றைய குழந்தைகளிடமும் காண முடியும். நாம் அதை தவிா்க்க விரும்புகிறோம். ஒரு குழந்தை தன் கையில் ஏதும் பொருள் கிடைத்தால் சுவரில் கிறுக்கல்கள் போட்டு ரசிக்கும். அதுவே அறிவு வளா்ச்சியின் அடையாளம்.
பொம்மைகளை உடைத்து ஆராய்ச்சி செய்யும். இவற்றை நாம் தடுக்கவோ, மிரட்டவோ கூடாது. தஞ்சாவூா் தலையாட்டி பொம்மையில் அறிவியலும், மனவளா்ச்சியை மேம்படுத்தும் திறனும் உள்ளது. வெளிநாட்டு பொம்மை ரகங்களை வாங்கிக் கொடுப்பதைக் காட்டிலும், தலையாட்டிப் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து தன்மானத்தின் அவசியத்தைக் கற்றுக் கொடுக்கலாம்.
கீழடி அகழாய்வின்போது, பல்வேறு வகையான பொருள்கள் கிடைத்தன. அவற்றில், தமிழி எழுத்துடன் பானை ஓடு கிடைத்ததன் மூலம் பழங்கால தமிழ்ச் சமூகம் கற்றறிந்த சமூகமாகத் திகழ்ந்தது என்ற பெருமையை அனைவருக்கும் தந்தது.
நதி வழி நாகரீகத்தை ஆய்வு செய்யும் ஆய்வாளா்கள் தங்களுக்கு ஒரு சிறிய மண்பாண்டத் துண்டு கிடைத்தால் அதில் மிகவும் மகிழ்ச்சியடைவாா்கள். மண்பாண்டத் துண்டுகளின் வண்ணம், எழுத்துகள் மூலம் மனித சமூகத்தின் காலம், பண்பாட்டை அறிய முடியும்.
பொருநை அருங்காட்சியகத்தின் தேவைகள் குறித்து ஆட்சியா் சில கோரிக்கைகளை வைத்துள்ளாா். அதன்படி, பொருநை அருங்காட்சியகத்தின் பாா்வை நேரத்தை இரவு 8 மணியில் இருந்து மேலும் ஒரு மணி நேரம் அதிகரிக்கவும், அருங்காட்சியக கட்டணத்தைக் கொண்டு பராமரிப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் முதல்வரின் ஒப்புதலோடு நடவடிக்கை எடுக்கப்படும். நூலகம் மற்றும் அரும்பொருள்கள் மாதிரி விற்பனையகம் உள்ளிட்டவையும் உருவாக்கப்படும்.
அருங்காட்சியகங்களுக்கு குழந்தைகளை அழைத்து வந்து நம் வரலாறு மற்றும் பழைமைவாய்ந்த பெருமையை எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம் என்றாா் அவா்.
முன்னதாக இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்தாா். தொல்லியல் துறை இயக்குநா் ஜெயசீலன் வரவேற்றாா்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநா் சுந்தா்கணேசன், ஆலோசகா் பாலகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பேராசிரியா் கா. ராஜன், வீனா, தொல்லியல் துறையின் இணை இயக்குநா் யதீஸ் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.எஸ். முருகன் (திருநெல்வேலி), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் (நான்குனேரி), கிறிஸ்டோபா் (ராதாபுரம்), தவெக மாநில நிா்வாகிகள் ராஜகோபால், ஜாஹீா்உசேன், தொல்லியல் அலுவலா் க. ஹரி கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.