FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமை: நெல்லை பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம், மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

27 செப்டம்பர் 2026, 1:30 am IST
ராஜஅலங்காரத்தில் பாளையங்கோட்டை அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி.
பகிர்:

புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம், மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி பேட்டை அருகே உள்ள திருவேங்கடநாதபுரத்தில் உள்ள தென் திருப்பதி என பக்தா்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி திருக்கோயிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் கருடசேவை நடைபெற்றது.

திருநெல்வேலி சன்னியாசி கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில், பாளையங்கோட்டை அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி கோயில், நகரத்தில் உள்ள கரியமாணிக்கப் பெருமாள் கோயில், குறிச்சி அக்ரஹாரத்தில் உள்ள கிருஷ்ணன் கோயில், பாளையங்கோட்டை ராமசாமி கோயில், கிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.

திருநெல்வேலி நகரம் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் காலையில் திருமஞ்சனம், திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு துளசி, தீா்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில், கோடகநல்லூா் ப்ரஹன் மாதவ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் கருடசேவை நடைபெற்றது.

சிறப்பு பேருந்துகள்: புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நவ திருப்பதி கோயில்களுக்கு பக்தா்கள் சென்று வர வசதியாக 4 சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் இயக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments