கோடையை வரவேற்கத் தயாராகும் குமரி!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு இன்னும் சிலநாள்களே உள்ள சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க குமரி மாவட்டம் தயாராக உள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு இன்னும் சிலநாள்களே உள்ள சூழ்நிலையில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க குமரி மாவட்டம் தயாராக உள்ளது.
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஒருங்கிணைந்த இம்மாவட்டம் இயற்கை அழகுக்கு பெயர் போனதாகும். ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் ஓரிடமாக திகழ்கிறது. விவசாயம், மீன்பிடித் தொழில், ரப்பர் உற்பத்தி ஆகியவை மக்களின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கின்றன.
கன்னியாகுமரி: இங்கு சூரிய உதயம், சூரிய அஸ்தமனமாகும் காட்சிகளை ஆண்டின் அனைத்து நாள்களிலும் பார்வையிடலாம் என்பதால் அனைத்து நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் கடலின் நடுவே இருவேறு பாறைகளில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளன.
இவற்றைக்காண பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுசேவையினை இயக்கி வருகிறது. இந்தப் படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை இயக்கப்படுகின்றன. இப்படகு மூலம் கடலுக்குள் பயணம் செய்வதை சுற்றுலாப் பயணிகள் மிகவும் ரசிக்கின்றனர். இதுதவிர மூன்று கடல்களும் ஓரிடத்தில் சங்கமிக்கும் முக்கடல் சங்கமம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது.
வட்டக்கோட்டை: கன்னியாகுமரியில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வட்டக்கோட்டை. இந்த கற்கோட்டை 18-ஆம் நூற்றாண்டில் தென் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதி டிலனாயின் உத்தரவுப்படி கட்டப்பட்ட படைத்தளமாகும். இக்கோட்டையை சுற்றிலும் உயரமான மதில்சுவர்கள் உள்ளன. உள்ளே அழகிய பூங்கா, போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் ஆகியன உள்ளன. கோட்டையின் மேல்தளத்தில் இருந்து பார்த்தால் அலைவீசும் கடலின் அழகைக் கண்டு ரசிக்கலாம்.
மருந்துவாழ்மலை: கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது மருந்துவாழ் மலை. ராமாயண காலத்து வரலாற்றுடன் தொடர்புடைய இம்மலையில் பல்வேறு நோய்களைக் குணமாக்கும் மருத்துவ குணம் வாய்ந்த அரியவகை மூலிகைகள் இன்றும் உள்ளன.
உதயகிரி கோட்டை: இக்கோட்டை அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வெடிமருந்துகள் தயாரிக்கும் இடமாகவும், போர் வீரர்களுக்கு போர் பயிற்சியளிக்கும் இடமாகவும் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோட்டை தற்போது புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மான் பூங்கா, லவ் பேர்ட்ஸ், சிறுவர் பூங்கா, மலை நடைப்பாதை, மயில், நட்சத்திர ஆமை, புறாக்கள், வெளிநாட்டு வாத்து, மீன்காட்சியகம், குடில்கள், என பலவித பொழுதுபோக்கு வசதிகளுடன் விளங்குகிறது.
பத்மநாபபுரம் அரண்மனை: குமரி மாவட்டம் தக்கலையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள சாமி சிலைகளும், சிற்பக் கூடங்களும், அரிய பொக்கிஷங்களும், சிற்பக் கலைக்கு சான்றாக விளங்குகின்றன. தமிழ் நாட்டில் அமைந்திருந்தாலும் இவ்வரண்மனை கேரள அரசின் கண்காணிப்பின் கீழ், கேரள பாரம்பரிய முறைப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் உபயோகப் படுத்திய மூலிகை கட்டில், வாள், கேடயம் உள்பட பல அரிய பொருள்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
மாத்தூர் தொட்டிப்பாலம்: திருவட்டாரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் மாத்தூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டி பாலமாகும். இது 115 அடி உயரமும் 1 கி.மீ. நீளமும் உடையது. சுமார் ரூ.13 லட்சம் செலவில் காமராஜர் முதல்வராக இருந்த போது, விளவங்கோடு கல்குளம் தாலுக்காக்களின் விவசாயத்தில் ஏற்பட்ட வறட்சியை போக்குவதற்காக 1966-இல் கட்டப்பட்டதாகும். இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சங்குத்துறை கடற்கரை: கன்னியாகுமரியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையான சங்குத்துறை பீச் தற்போது நவீன மயமாக்கப்பட்டு குழந்தைகள் பூங்கா, குடில்கள் உட்பட சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சொத்தவிளை கடற்கரை: நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ தொலைவில் புத்தளம் அருகில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை. சுற்றுலாப் பயணிகள் பொழுதுபோக்க சிறந்த இடமாக இது திகழ்கிறது.
தெக்குறிச்சி கடற்கரை: மேற்கு கடற்கரையோரம் ஆரவாரமின்றி அமைதி அழகுடன் காட்சியளிக்கும் இக்க்கடற்கரை நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கடற்கரையோரமாக அமைந்துள்ள சவுக்கு மரங்களின் நிழல் பரவசமூட்டுகிறது.
முட்டம் கடற்கரை: தமிழகத்தின் அழகிய கடலோர கிராமங்களில் தனித்தன்மையோடு திகழ்வது முட்டம் கடற்கரையாகும். இங்கு அமைந்துள்ள கலங்கரை விளக்கம் காண்போர் இதயம் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. நாகர்கோவிலிலிருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இக்கடற்கரையில் அடிக்கடி சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கமாகும்.
குளச்சல் கடற்கரை: நாகர்கோவிலிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குளச்சல் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையாகும். கி.பி. 1741-ஆம் ஆண்டு டச்சுப்படையினருக்கும், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிற்கும் இங்கு நடந்த போரில், மன்னர் வெற்றி வாகை சூடி டச்சுப்படையை சேர்ந்த சிலரை கைதியாக சிறைபிடித்தார். அவர்களில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டிலனாய் மிகத்திறமையான போர் வீரர் என்பதை அறிந்த மன்னர், அவரை மன்னித்து தனது படைத்தளபதியாக நியமித்தார். இங்கு மன்னரின் வெற்றியை நினைவு படுத்தும் வகையில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
தேங்காய்ப்பட்டினம் கடற்கரை: இக்கடற்கரை அழகிய தென்னை மரங்கள் அணிவகுக்க காட்சியளிக்கிறது. மேற்கு கடற்கரையோரம் அமைந்துள்ள இங்கு தாமிரவருணி ஆறு சங்கமிக்கிறது.
இத்தனை சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய இம்மாவட்டத்துக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை தொடங்கவிருக்கும் நிலையில் பயணிகளை வரவேற்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.