குமரி மாவட்டத்தில் அயினி பலாப்பழங்கள் சீசன் தொடக்கம்
குமரி மாவட்டத்தில் அயனி பலாப்பழங்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில், இப்பழங்கள் சந்தைகளுக்கு வரத்தொடங்கியுள்ளன.
குமரி மாவட்டத்தில் அயனி பலாப்பழங்கள் சீசன் தொடங்கியுள்ள நிலையில், இப்பழங்கள் சந்தைகளுக்கு வரத்தொடங்கியுள்ளன.
அயினிப் பலா மரங்கள் கேரளத்திலும், தமிழகத்தில் குமரி மாவட்டத்திலுமே அதிகளவில் வளருகின்றன. நேராகவும், பரந்து கிளைகளை விரித்தும் வளரும் தன்மை கொண்ட இம்மரங்கள் உறுதியானவை. வீடுகளுக்கு, கதவு, ஜன்னல் மற்றும் அறைகலன்கள் செய்வதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அயினி மரங்களில் மே-ஜூன் மாதங்களில் பழங்கள் காய்க்கும். இப்பழங்கள் பலாப்பழங்களைப் போன்ற வடிவில், உள்ளங்கைகளில் தங்கும் அளவுக்கு சிறிய அளவில் இருக்கும். இப்பழங்களில் அடர்மஞ்சள் நிறத்தில் வலுவற்ற சிறு முட்களுடன் இருக்கும் மேல் தோலை கைகளால் அகற்றினால் உள்ளே ஒற்றைத் தண்டில் மஞ்சள் நிறத்தில் பழச்சுளைகள் இருக்கும். இப்பழச்சுளைகளின் உள்ளே இருக்கும் வெள்ளை நிறத் தோல் கொண்ட விதைகளை வறுத்து, தோல் நீக்கி உண்ணலாம். இவை வேர்கடலை போன்று தனி சுவை கொண்டதாக இருக்கும்.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, குலசேகரம், அருமனை, திருவட்டாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது அயினிப்பலா மரங்களில் பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. வனப்பகுதிகளிலும் ஏராளமான மரங்களில் பழங்கள் காய்த்து நிற்கின்றன.
இம்மரங்களில் ஏறி பழங்களைப் பறிப்பதற்கு தற்போது ஆள்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது. பழங்களைப் பறிப்பவர்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டியுள்ளதால், பெரும்பாலான மரங்களில் பழங்கள் பழுத்து கீழே விழுந்து சேதமாகின்றன. மேலும் காகங்கள், வெளவால்கள் உள்ளிட்ட பறவைகளுக்கு இவை உணவாக அமைகின்றன.
பழங்களைப் பறிப்பதற்கு போதிய ஆள்கள் இல்லாத நிலை மற்றும் கூலி செலவுகள் அதிகம் இருந்தபோதும், ஆங்காங்கே இப்பழங்கள் பறிக்கப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு வருவதும் நடைபெறுகின்றன.
குலசேகரம், திருவட்டாறு, அருமனை, பனச்சமூடு உள்ளிட்ட சந்தைகளில் இப்பழங்கள் தற்போது விற்பனைக்கு வந்தவண்ணம் உள்ளன. நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் தள்ளுவண்டி கடைகளில் இப்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குலசேகரம் சந்தையில் இப்பழம் ஒன்று ரூ. 5 முதல் ரூ. 20 வரை விற்கப்படுகிறது. இப்பழங்களை வாங்கி வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு அனுப்புவதை இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதே போன்று வெளியூர்களில் நீண்ட காலம் தங்கியிருந்து பின்னர் ஊருக்கு வரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பழங்களை ஆவலுடன் வாங்கி செல்வதை காணமுடிகிறது.
மதிப்புக் கூட்டி விற்றால் அதிக லாபம்
இப்பழங்களை பறித்து நவீன தொழில்நுட்பங்களுடன் அவற்றின் சுளைகளிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை தயாரித்து விற்பனை செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் என வேளாண் அறிவியல் நிலைய உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியரும், உணவியல் தொழில் நுட்ப நிபுணருமான சிசி தீப்லின் டேவிட் கூறியது:
அயினிப் பலா மரங்கள் கேரளத்தில் அதிகம் காணப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் அகஸ்தீசுவரம் வட்டத்தைத் தவிர இதர வட்டங்களில் உள்ளன. இப்பழங்களில் உள்ள சுளைகளை பிரித்தெடுத்து மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி ஆண்டு முழுவதும் விற்பனை செய்யலாம். குறிப்பாக பழச்சுளைகளிலிருந்து பல்பர் கருவி மூலம் விதைகளை நீக்கி மின் உலர்த்திகள் மூலம் உலர்த்தி வைத்து தேவைக்கேற்ற வகையில் பயன்படுத்த முடியும். மேலும் சர்க்கரை கரைசல் சேர்த்து சவ்வூடு பரவுதல் தொழில்நுட்பத்தில் சுளைகளை உலர்த்தி பயன்படுத்த முடியும். மேலும் பழங்களில் அமிலத்தன்மையை நிலைப்படுத்தி பழபானம் மற்றும் பழக்கூழ் தயாரித்து ஆண்டு முழுவதும் கெடாமல் பயன்படுத்த முடியும். பழச்சுளைகளிலிருந்து ஜாம், ஜெல்லி, பாகு தயாரிக்க முடியும்.
மாம்பழக் கூழில் பப்பாளி சேர்ப்பது போன்று பிற பழங்களில், அயினி பழம் கலந்து பல பழ பானங்கள் தயாரிக்க முடியும். இவ்வாறு தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் சந்தைப் படுத்த முடியும். குறிப்பாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது அன்னியச் செலாவணியை சம்பாதிக்க முடியும்.
இதற்கான தொழில்நுட்பங்களை திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையம், தொழில் முனைவோருக்கு வழங்கத் தயாராக உள்ளது என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.