அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக சிற்றுந்து ஓட்டுநர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த சிற்றுந்து ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
மார்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த சிற்றுந்து ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
குளச்சல் பகுதியிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிந்தது. இப்பேருந்தை பள்ளியாடி வாகவிளை பகுதியில் வைத்து சிற்றுந்து ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது, அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும், சிற்றுந்து ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிற்றுந்து ஓட்டுநர் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதுடன், அரசுப் பேருந்தின் ஜன்னலோர கண்ணாடியை கம்பியால் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதில், காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் அஜில்குமார் (33) குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, தடம்மாறி இயக்கப்படும் சிற்றுந்துகளை பறிமுதல் செய்யவேண்டும், சம்பந்தப்பட்ட சிற்றுந்து ஓட்டுநர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்த்தாண்டம் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர், நடத்துநர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப் போராட்டத்தால் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் சிற்றுந்து ஓட்டுநர் செறுகோல் பகுதியைச் சேர்ந்த பாபு (32) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.