FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குமரி திருமலை திருப்பதி கோயிலில் 48 அதிநவீன கண்காணிப்பு கேமரா: திருமலை திருப்பதி பாதுகாப்பு அதிகாரி தகவல்

கன்னியாகுமரி திருமலை திருப்பதி கோயிலில் 48 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கன்னியாகுமரி திருமலை திருப்பதி கோயிலில் 48 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் மஹா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் நிறுவப்படவுள்ள ஏழரை அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன மூலவரான ஏழுமலையான் சிலை, மூன்றரை அடி உயர பத்மாவதி தாயார் சிலை, ஆண்டாள் சிலை, இரண்டரை அடி உயர கருடாழ்வார் சிலை, ஆறரை அடி உயர துவாரபாலகர் சிலை ,  40அடி உயர  கொடிமரம் ஆகியவை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 
இந்நிலையில், கோயிலில் பாதுகாப்பு அம்சம், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார் கன்னியாகுமரி வந்தார்.
அங்கு, கோயிலில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: கன்னியாகுமரி திருமலை திருப்பதி கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால் பாதுகாப்பு அம்சத்தில் திருமலை திருப்பதி நிர்வாகம் அதிக கவனம் செலுத்தும்.
இதற்காக, கோயிலைச் சுற்றி 24 மணிநேர மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். சாதாரண பாதுகாப்பு, ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு, சிறப்புப் பாதுகாப்பு என பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்த பாதுகாப்புப் பணியில் திருமலை திருப்பதி பாதுகாவலர்கள் ஈடுபடுவார்கள். மேலும் கோயிலைச் சுற்றிலும் 48 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். இதில் இரண்டு இடங்களில் உயர்பாதுகாப்பு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுகிறது. மேலும் தேவைப்பட்டால் கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். 
 கோயில் அமைந்துள்ள இடம் கடற்கரை என்பதால் இயற்கை இடர்பாடுகளை தாங்கும் சக்தி கொண்ட கேமரா மற்றும் கேபிள் அமைக்கப்படும். பக்தர்களுக்கு வசதியாக வாகனங்கள் நிறுத்த  கார்பார்க்கிங் வசதி அமைக்கப்படும். கோயில் அமையும் பகுதி பசுமை மாறா பகுதியாக அமைக்கப்படும். இதற்காக கோயிலைச் சுற்றிலும் உள்ள மரங்கள் எதுவும் அகற்றப்படாது; மாறாக கூடுதலாக மரங்கள் நடப்பட்டு பசுமை பகுதியாக மாற்றப்படும் என்றார் அவர்.
 சென்னை உள்ளூர் தகவல் ஆலோசனை மைய உறுப்பினர் மோகன்ராவ், ரவி, திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி செயற்பொறியாளர் அமர்நாத் ரெட்டி, கன்னியாகுமரி திருமலை திருப்பதி கோயில் பொறுப்பாளர் பாலு, விவேகானந்தா கேந்திர பொருளாளர் ஹனுமந்த்ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments