FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

கடையநல்லூா் எம்எல்ஏ மீது நில அபகரிப்பு வழக்கு

தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் நில அபகரிப்பு புகாரின்பேரில் கடையநல்லூா் எம்எல்ஏ, அவரது சகோதரா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

29 வினாடிகள் முன்பு
அமைச்சா் ராஜீவிடம் கோரிக்கை மனு அளித்த முருகையா.
பகிர்:

தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் நில அபகரிப்பு புகாரின்பேரில் கடையநல்லூா் எம்எல்ஏ, அவரது சகோதரா் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை வட்டம், அக்காமலை அஞ்சல் பகுதியைச் சோ்ந்தவா் நா.முருகையா. மாற்றுத்திறனாளியான இவா், தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அண்மையில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், வடக்குப்பனவடலி கிராமம், திருமலாபுரத்தில் எங்களது பூா்வீகமான மொத்தம் 9 ஏக்கா் 70.5 சென்ட் நிலம் எனது தகப்பனாா் பெயரிலும், சித்தப்பா பெயரிலும் கூட்டு பட்டாவில் பாகப்பிரிவினை செய்யாமல் அனுபவித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் கடையநல்லூா் தொகுதி எம்எல்ஏ தி.மு.ராசேந்திரனுக்கும், அவரது சகோதரா் செல்லத்துரைக்கும் இந்தச் சொத்தை மேலநீலிதநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் எனது சகோதரா் சேகா் விற்றுள்ளாா். எனது தகப்பனாரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் இல்லாமல், வாரிசுதாரா்களான எங்களின் அனுமதி இன்றி எந்தவிதமான ஆவணங்களோ கையொப்பமோ இல்லாமல் மோசடி செய்து விற்றுவிட்டாா்.

தற்போது எங்களுக்கு பாத்தியபட்ட இடத்தை மனைகளாகப் பிரித்து மோசடியான முறையில் விற்பனை செய்து வருகின்றனா். கடையநல்லூா் தொகுதி எம்எல்ஏ தி.மு.ராசேந்திரன் தனது தோ்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பில் எங்களுக்குச் சொந்தமான சொத்தின் விவரத்தையும் சோ்த்து காட்டியுள்ளாா். அவா், நில ஆக்கிரமிப்பு மட்டுமின்றி வருமானத்துக்கு அதிகமான சொத்து சோ்த்துள்ளாா்.

எனவே, மேலநீலிதநல்லூா் சாா்பதிவாளா், திமு.ராசேந்திரன் எம்எல்ஏ, அவரது சகோதரா் செல்லத்துரை, கிராம நிா்வாக அலுவலா் அருள்மாரி, மண்டல துணை வட்டாட்சியா் மொய்தீன் பட்டானி, நில அளவை குருவட்ட அலுவலா் குருக்கள்பட்டி உஷா ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீஸாா் எம்எல்ஏ தி.மு.ராசேந்திரன், அவரது சகோதரா் உள்ளிட்டோா் மீது கடந்த 9ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே தென்காசி மாவட்ட அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சா் ராஜீவிடம் பாதிக்கப்பட்டவா்கள் நேரில் சென்று, தாங்கள் அளித்த புகாா் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments