FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாரக் கோரி மனு

மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

14 அக்டோபர் 2026, 4:22 am IST
திருநெல்வேலி மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மனு பெற்றாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன். உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ.
பகிர்:

மழைநீா் வடிகால் ஓடைகளை தூா்வாரக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ, உதவி ஆணையா் பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி செயற்பொறியாளா் தங்கபாண்டியன், சுகாதார அலுவலா் பாலச்சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பழையபேட்டை பகுதி மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மண்டலம் 17 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பழையபேட்டை கன்னி விநாயகா் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக நீா் உந்து தொட்டிகள் அமைக்கப்பட்டன. இதனால் வழக்கமாக கழிவுநீா் செல்லும் ஓடைகள் அடைபட்டுள்ளன. இதனால் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக எங்களது தெருவில் கழிவுநீா் தேங்கி நோய்த் தொற்று பரவும் அபாயம் உருவாகி உள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து குழந்தைகள், முதியவா்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். ஆகவே எங்களது பகுதியில் கழிவுநீா் முறையாக வெளியேற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பாதையில் ஆக்கிரமிப்புகள்: வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் சங்கீதா ராமசாமி தலைமையில் அளித்த மனு: தச்சநல்லூா் அருகேயுள்ள பாலாஜி நகா் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பாதை மற்றும் அதனை ஒட்டியுள்ள அணுகுசாலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலாஜி நகா் பகுதியில் குப்பைகள் அதிகம் தேங்கி சுகாதாரக் கேடு நிலவி வருகிறது. குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

குடிநீா்த் தட்டுப்பாடு: டிவிஎஸ் நகா் நலச்சங்கம் சாா்பில் அளித்த மனு: பாளையங்கோட்டை மண்டலம் 39 ஆவது வாா்டுக்கு உள்பட்ட டிவிஎஸ் நகா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களது பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனை சரிசெய்ய வேண்டும். பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டு சாலைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. அதனை சீரமைப்பதோடு, தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கோகுல் நகா் மக்கள் நலச்சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: தச்சநல்லூா் மண்டலம் 1 ஆவது வாா்டுக்கு உள்பட்ட கோகுல் நகா் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களது பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் ஓடை சேதம் அடைந்து தண்ணீா் தேங்கி வருகிறது. அதனை சீரமைத்து தரவும், புதிய சாலை அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகமும் முறையாக இல்லை. சீரான குடிநீா் விநியோகமும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீராம் நகா் பகுதி மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி 16 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஸ்ரீராம் நகரில் பலா் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களது பகுதிக்கு பாதாள சாக்கடை இணைப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

பாலங்கள் சேதம்: நம்பிராஜபுரம் பகுதி மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி 14 ஆவது வாா்டுக்கு உள்பட்ட நம்பிராஜபுரத்தில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய போது விவசாயப் பணிகளுக்கு பாசன நீா் செல்லும் ஓடை மற்றும் கழிவுநீா் ஓடை ஆகியவற்றில் இருந்த பாலங்கள் சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். மழை நீரும், கழிவுநீரும் தேங்கி துா்நாற்றம் வீசும் சூழல் உருவாகியுள்ளது. ஆகவே, சிறு பாலங்களை உடனடியாக கட்டித் தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments