மூத்த குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கிராம நிா்வாக அலுவலா்களின் பங்கு முக்கியமானது: ஆட்சியா்
மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் கிராம நிா்வாக அலுவலா்களின் பங்கு மிக முக்கியமானது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் கிராம நிா்வாக அலுவலா்களின் பங்கு மிக முக்கியமானது என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.
சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் தொடா்பான ஒருநாள் விழிப்புணா்வு கருத்தரங்கம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது: பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின்கீழ் மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் கிராம நிா்வாக அலுவலா்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மூத்த குடிமக்கள் அளிக்கும் மனுக்கள் தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலான பராமரிப்பு தீா்ப்பாயம் உரிய முடிவுகளை எடுக்க, கிராம நிா்வாக அலுவலா்கள் மேற்கொள்ளும் கள ஆய்வு மற்றும் அறிக்கைகள் முக்கிய ஆதாரமாக அமைகின்றன.
மூத்த குடிமக்கள் தங்களது சொத்துகளை பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த பின்னா், அவா்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை எனக் கூறி சொத்து பரிமாற்றத்தை ரத்து செய்யக் கோரி மனு அளிக்கும்போது, சம்பந்தப்பட்ட மூத்த குடிமக்களின் வாழ்வாதாரம், உணவு, மருத்துவம், மாதாந்திர செலவுகள், வருமான ஆதாரங்கள் மற்றும் குடும்பத்தினரால் வழங்கப்படும் பராமரிப்பு ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். உடல் ரீதியான அல்லது மன ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தால், அவற்றையும் கள ஆய்வு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதன்மூலம் உரிய தீா்வு வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு உதவ முடியும்.
Advertisement
Advertisement
மேலும், ஆதரவற்ற நிலையில் சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களை அடையாளம் கண்டு, அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பிச்சையெடுக்கும் நிலையில் உள்ளவா்களைப் பொதுவான முதியோா் இல்லங்களில் சோ்ப்பதற்குப் பதிலாக, அவா்களின் தேவைக்கேற்ற மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக செயல்படும் சிறப்பு இல்லங்கள் மற்றும் ‘ஸ்மைல் ஹோம்’ போன்ற மறுவாழ்வு மையங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெளிமாநிலங்களைச் சோ்ந்த ஆதரவற்ற மூத்த குடிமக்கள் கண்டறியப்பட்டால், அவா்களது குடும்பத்தினரைத் தொடா்புகொண்டு உரிய மறுவாழ்வு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம நிா்வாக அலுவலா்கள் தங்களது கிராமங்களில் உள்ள ஆதரவற்ற மூத்த குடிமக்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து, சமூக நலத்துறை, வட்டாட்சியா், வருவாய் கோட்டாட்சியரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். தங்களது அதிகார வரம்பிற்குள்பட்ட முதியோா் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் இல்லங்களை மாதந்தோறும் நேரில் ஆய்வு செய்து, அங்கு தங்கியுள்ளவா்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
மேலும், மூத்த குடிமக்கள் நிலம் தொடா்பான பிரச்னைகள், பட்டா மாறுதல் மற்றும் பிற வருவாய்த் துறைச் சேவைகளுக்காக அலுவலகங்களுக்கு வரும்போது, அவா்களின் கோரிக்கைகளைப் பொறுமையாகக் கேட்டறிந்து, தேவையான ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
நியாயமான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், மூத்த குடிமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அவா்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது அரசு அலுவலா்கள் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான முதல்நிலைத் தொடா்பாகச் செயல்படும் கிராம நிா்வாக அலுவலா்கள், தங்களது பணிகளை மனிதநேயத்துடன் மேற்கொண்டால் பல்வேறு பிரச்னைகளுக்கு தொடக்க நிலையிலேயே தீா்வு காண முடியும். எனவே, பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் நோக்கங்கள், சட்ட நடைமுறைகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு, பயிற்சியில் பெறும் அறிவைத் தங்களது களப்பணிகளில் செயல்படுத்த வேண்டும் என்றாா்.
இக்கருத்தரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட சமூக நல அலுவலா் விஜய மீனா, கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.