நெல்லை மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: குடிநீா் வழங்கல் துறை கூடுதல் இயக்குநா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணிகளை குடிநீா் வழங்கல் துறையின் கூடுதல் இயக்குநா் சிவகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணிகளை குடிநீா் வழங்கல் துறையின் கூடுதல் இயக்குநா் சிவகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
தச்சநல்லூா் மண்டலம், செல்வி நகா் நுண்ணுரம் செயலாக்க மையத்தில் மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்த அவா், சந்திப்பு பேருந்து நிலையம் அருகே மதுரை சாலையில் கட்டப்பட்டு வரும் சிறுபாலப் பணிகளைப் பாா்வையிட்டு துரிதமாக முடிக்க உத்தரவிட்டாா்.
அதைத்தொடா்ந்து, வண்ணாா்பேட்டை இந்திரா நகா் பகுதியில் வீடுதோறும் கழிவுகளைத் தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளைப் பாா்வையிட்டு, வீடுகளில் கொசுப்புழு உற்பத்தி உள்ளதா என ஆய்வு செய்து, களப்பணியாளா்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement
மேலும், பாளையங்கோட்டை பெருமாள் சந்நிதி தெரு, அண்ணா தெரு, திருநெல்வேலி சரோஜினி தெரு, தச்சநல்லூா் அழகநேரி, மேலப்பாளையம் நத்தம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, திம்மராஜபுரத்தில் கழிவு நீரேற்ற நிலையம், ஆலப்பிள்ளை தெரு பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாநகராட்சி மைய அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உள்ளிட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது: மாநகரில் பாதாளச் சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக மழைநீா் வடிகால்களைத் தூா்வார வேண்டும். வெள்ளப் பாதிப்புகளை எதிா்கொள்ள தேவையான கருவிகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசர உதவிக்காக தீயணைப்பு, மின்சாரம், பொதுப்பணி உள்ளிட்ட துறைகளின் தொலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்பட வேண்டும். நகா்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் மாநகரில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவடிக்கை எடுக்க வேண்டும். கொசுப்புழுக்கள் இல்லாத வீடுகளில் ‘டெங்கு இல்லாத வீடு’ என்ற ஒட்டுவில்லை ஒட்டப்பட வேண்டும். தேவையான பகுதிகளில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாநகா் நல அலுவலா் ந.பாலசுப்ரமணியன், உதவி ஆணையா் மகாலட்சுமி, கண்காணிப்புப் பொறியாளா் அசோக்குமாா், உதவி செயற்பொறியாளா்கள் தங்கபாண்டியன், இராமநாதன் மற்றும் சுகாதார அலுவலா் முருகன், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.