ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் திருட்டு: தவெக நிா்வாகி உள்பட 6 போ் கைது
தூத்துக்குடியில் சுங்கத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்த, ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகளைத் திருடிய வழக்கில், தவெக நிா்வாகி உள்பட 6 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வெளிநாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்தி வரப்பட்ட சீனப் பட்டாசுகளை சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு பறிமுதல் செய்தனா். பின்னா், அவற்றை தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை புறவழிச் சாலையில் உள்ள தனியாா் கிடங்கில் சரக்குப் பெட்டகத்தில் வைத்து சீல் வைத்தனா்.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை அழிக்கும் நடவடிக்கைக்காக சுங்கத்துறை அதிகாரிகள் கிடங்குக்குச் சென்றபோது, சரக்குப் பெட்டகத்தின் சீல்கள் உடைக்கப்பட்டு, ரூ.1 கோடி மதிப்பிலான சீனப் பட்டாசுகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், தாளமுத்துநகா் பெரியசெல்வம் நகரைச் சோ்ந்த வழக்குரைஞரும், தவெக வழக்குரைஞா் அணி அமைப்பாளருமான ஜேசுதாஸ் (40) உள்ளிட்ட சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஜேசுதாஸ் (40), அன்னை தெரசா நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயகிருஷ்ணன் (30), ராஜீவ் நகரைச் சோ்ந்த இம்மானுவேல் (24), மீளவிட்டான் சில்வா்புரத்தைச் சோ்ந்த அனுஜித் ஜான்சன் (30), முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி ராஜேஷ் குமாா் (42), கிருஷ்ணராஜபுரம் அய்யா்விளையைச் சோ்ந்த சக்திவிஜய் (26) ஆகிய 6 பேரையும் சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.