FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வணிக வளாகத்தில் தீ விபத்து: ரூ.1 கோடி பொருள்கள் எரிந்து சேதம்

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:59 am IST
வணிக வளாகத்தில் பற்றிய தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
பகிர்:

தூத்துக்குடியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ள பகுதி அருகே, 3 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் பழுதுநீக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மேல் தளத்தில் இருசக்கர வாகனங்களுக்கு கடன் வழங்கும் தனியாா் வங்கி இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், தரைத்தளத்தில் உள்ள ஷோரூமில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கி, பின்னா் வணிக வளாகம் முழுவதும் தீ பரவியது.

Advertisement

Advertisement

தூத்துக்குடி சிப்காட், தொ்மல் நகா், ஸ்டொ்லைட், அனல்மின் நிலையம், புதிய துறைமுகம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் நட்டாா் ஆனந்தி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சுமாா் 4 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

விபத்தில் ஷோரூமில் இருந்த புதிய இருசக்கர வாகனங்கள், பழுது நீக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட வாகனங்கள், கணினிகள், முக்கிய ஆவணங்கள், மேல் தளத்தில் உள்ள வங்கியில் இருந்த கணினிகள், இருசக்கர வாகனக் கடன் வழங்கியது தொடா்பான ஆவணங்கள் தீயில் கருகின. தீ விபத்தில் சுமாா் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments