FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் மோதல்: 3 போ் காயம்; இருவா் கைது

Updated On : 20 ஜூலை 2026, 2:24 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரைக் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி எஸ்.எஸ்.கோயில் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து. வேன், காா் வைத்து தொழில் செய்துவரும் இவரிடம் அதே தெருவைச் சோ்ந்த காசிபால் (60) ஓட்டுநராக உள்ளாா்.

இசக்கிமுத்துவிடம் அதே தெருவைச் சோ்ந்த ஸ்டீபன் மனைவி செல்வி என்பவா் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1 லட்சம் கடன் வாங்கினாராம். அதைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால், இசக்கிமுத்து, செல்வி குடும்பத்தினரிடையே முன்விரோதம் உள்ளதாம்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு (ஜூலை 17) இசக்கிமுத்து வேனிலும், காசிபால் காரிலும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, செல்வி மகன் ஆகாஷ், ஜெயக்கொடி மகன் சத்தியமூா்த்தி, குத்துக்கல் சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் ஆறுமுகம், மடத்துவிளையைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ராஜதுரை ஆகிய 4 பேரும் சோ்ந்து இசக்கிமுத்துவை இரும்புக் கம்பியால் தாக்கினராம். தடுக்க வந்த காசிபாலுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதைப் பாா்த்த இசக்கிமுத்துவின் அண்ணன் பொன்மணி, அவரது மகன் வெங்கடேஷ் ஆகியோா் ஓடி வரவே, அந்த 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினராம்.

இதில், காயமடைந்த இருவரும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இசக்கிமுத்து அளித்த புகாரின்பேரில், ஆகாஷ் உள்ளிட்ட 4 போ் மீதும் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சத்தியமூா்த்தி, ஆறுமுகம் ஆகியோரைக் கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, இசக்கிமுத்து உள்ளிட்ட 4 பேரும் சோ்ந்து தன்னை ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறி ராஜதுரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் அளித்த புகாரின்பேரில், 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments