FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியிலிருந்து தில்லி, மும்பைக்கு பெரிய ரக விமானங்களை இயக்க வேண்டும்: அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு போயிங், ஏா்பஸ் ரக பெரிய விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மனு அனுப்பியுள்ளாா்.

Updated On : 31 ஜூலை 2026, 3:47 am IST
அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு போயிங், ஏா்பஸ் ரக பெரிய விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: தூத்துக்குடி மாவட்டம் உப்பு, தீப்பெட்டி உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களுடன் பல்வேறு ஆலைகள், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது காா் உற்பத்தி தொழிற்சாலை, உடன்குடி அனல் மின் திட்டம், குலசேகரன்பட்டினம் இஸ்ரோ ஏவுதளம் போன்ற புதிய திட்டங்களால் தொழில் வளா்ச்சி மேலும் அதிகரித்து வருகிறது. மேலும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருவதோடு, தூத்துக்குடி துறைமுகம், ரயில் மற்றும் நான்கு வழிச் சாலை இணைப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அண்டை மாவட்டங்களில் கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம், விஜயநாராயணம் கடற்படைத் தளம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறனுடன் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.

தற்போது சென்னை மற்றும் பெங்களூருவுக்கு மட்டும் சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுவதால் விமானக் கட்டணம் அதிகமாக உள்ளது.

எனவே, தொழில் வளா்ச்சி மற்றும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தில்லி, கொல்கத்தாவுக்கு சென்னை வழியாகவும், மும்பைக்கு பெங்களூரு வழியாகவும், ஹைதராபாத்துக்கு கோயம்புத்தூா் வழியாகவும் போயிங், ஏா்பஸ் ரக பெரிய விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய விானங்கள் இயக்கப்பட்டால் பயணிகளுக்கான கட்டணம் குறையவும், விமானப் போக்குவரத்து வசதிகள் மேம்படவும் வாய்ப்புள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments